மலேசியாவில் நடைபெறும் ‘தளபதி கச்சேரி’ விழாவுக்கு கடும் கட்டுப்பாடுகள்
கோலாலம்பூர்:
மலேசியாவில் வரும் டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ள ‘தளபதி கச்சேரி’ விழாவை முன்னிட்டு, விழா நடைபெறும் மைதானத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை காரணங்களுக்காக இந்த நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு விழா மைதானத்திற்குள் அனுமதி வழங்கப்படாது. மேலும், ஒருமுறை மைதானத்திற்குள் நுழைந்து வெளியே சென்றால், மீண்டும் உள்ளே செல்ல அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக, உணவுப் பொருட்கள், மது வகைகள் (ஆல்கஹால்), கேமரா, டிரோன் கேமரா உள்ளிட்ட எந்தவிதமான சாதனங்களையும் மைதானத்திற்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. அதேபோல், அரசியல் தொடர்புடைய எந்த பொருளையும் மைதானத்திற்குள் கொண்டு வரக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நடிகர் விஜயின் தவெக (TVK) கட்சியுடன் தொடர்புடைய டி-ஷர்ட், கொடி, பேட்ஜ், போஸ்டர், குடை உள்ளிட்ட எந்தவிதமான பொருளையும் கொண்டுசெல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தவெக கட்சியின் கொடி நிறங்களான சிவப்பு மற்றும் மஞ்சளை வெளிப்படையாக பிரதிபலிக்கும் எந்த பொருளுக்கும் அனுமதி வழங்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றுமாறு விழாவில் பங்கேற்கும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

