உலக அழிவு தள்ளிவைப்பு: கானா நபரின் தீர்க்கதரிசனத்தில் திடீர் மாற்றம்
கானா நாட்டைச் சேர்ந்த எபோ நோவா (Ebo Noah) என்பவர், தன்னைத் தானே தீர்க்கதரிசி என அறிவித்து, 2025 டிசம்பர் 25ஆம் தேதி முதல் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் உலகம் முழுவதும் அழிவைச் சந்திக்கப் போவதாக பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இந்த அழிவில் இருந்து மனிதர்களைக் காப்பாற்றுவதற்காக, கடவுளின் உத்தரவின் பேரில் பைபிளில் குறிப்பிடப்படுவது போல 8 பெரிய பேழைகளை (கப்பல்கள்) கட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார். எபோ நோவாவின் இந்த அறிவிப்பை நம்பிய பலர், பேழைகள் கட்டுவதற்காக நிதி உதவி செய்ததோடு, அவற்றில் இடம் பெறுவதற்காக அவரைத் தேடிச் செல்லவும் தொடங்கினர்.
இந்நிலையில், உலக அழிவு குறித்து முன்பு வெளியிட்ட தனது அறிவிப்பை எபோ நோவா திடீரென மாற்றிக் கொண்டுள்ளார். உலகம் அழிவது தற்போது தள்ளிப் போகும் என அவர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதற்குக் காரணமாக, தாம் கடவுளிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வந்ததாகவும், அந்த பிரார்த்தனையை ஏற்றுக்கொண்ட கடவுள், உலகத்தை அழிக்கத் திட்டமிட்டிருந்த கடும் மழை மற்றும் வெள்ளத்தை தற்காலிகமாகத் தள்ளிவைத்துள்ளதாகவும் எபோ நோவா தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பால் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் குழப்பமும், சந்தேகமும் எழுந்துள்ள நிலையில், சமூக ஊடகங்களில் இது குறித்து பல்வேறு விமர்சனங்களும், சர்ச்சைகளும் உருவாகி வருகின்றன.

