திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி.. அதிமுக காணாமல் போகும்.. – புகழேந்தி அதிரடி

திமுகவுக்கு தவெகாவுக்கும் தான் போட்டி என்பது போல திருச்சி உள்ளது என்றும் அவர்கள் ஒன்றிணையவில்லை என்றால் அதிமுக காணாமல் போகும் அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் அல்லது நீக்கி வைக்கப்பட்டுள்ள அனைவரையும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஒருங்கிணைந்த அதிமுக உருவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 5ஆம் தேதி, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியிருந்தார். மேலும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 10 நாட்களுக்கு கெடு விதித்து இருந்தார்.
இது அதிமுகவில் புயலை கிளப்பிய நிலையில் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து செங்கோட்டையன் உட்பட அவரது ஆதரவாளர்கள் விடுவிக்கப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பை வெளியிட்டார். இந்த சூழலில் ஹரித்துவார் செல்வதாக கூறி திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன், அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார்.
இதற்கிடையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், ‘அதிமுக ஒன்றுபட வேண்டும் என்ற எனது கருத்துக்கு தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தொண்டர்களின், பொது மக்களின் கருத்துகளை மனதில் வைத்துக்கொண்டு வலிமை பெறுவதற்கு, 2026-ல் வெற்றி பெறுவதற்கும் அதிமுக ஒன்றுபட வேண்டும்” என கூறினார்.
இந்நிலையில் முன்னாள் நிர்வாகி புகழேந்தி பேசுகையில், “செங்கோட்டையனை சந்தித்து பேசினேன் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை அனைவரும் ஒன்றிணைந்து மலர் தூவி மரியாதை செலுத்த வேண்டும் என நான் கோரிக்கை வைத்தேன். ஆனால் அவர்கள் கோரிக்கையை ஏற்கவில்லை.
இவர்கள் இன்னமும் ஒன்றிணையவில்லை என்றால் அதிமுக காணாமல் போகும். விஜய் களத்தில் இருக்கிறார். திமுகவுக்கு தவெகாவுக்கும் தான் போட்டி என்பது போல திருச்சி உள்ளது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இன்னொரு முறை கூட்டத்திற்குள் வந்தால் அடித்து உதைத்து விடுவேன் என்று மிரட்டிய ஒரே தலைவர் எடப்பாடி பழனிச்சாமியாக தான் இருப்பார்.
ஆனால் அவர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு வேடிக்கை பார்க்கிறது. எம்ஜிஆர், பேரறிஞர் அண்ணா போன்றவரின் புகைப்படத்தை விஜய் பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை” என்று தெரிவித்தார்.