அஜித் வந்தால் இதைவிட கூட்டம் அதிகம் வரும்’ – விஜய் மீது சீமான் கடும் தாக்கு

நடிகர்கள் அஜித்குமார், ரஜினிகாந்த், நடிகை நயன்தாரா ஆகியோர் வந்தால் விஜய்யை விட அதிக கூட்டம் வரும் என்றும் கூட்டத்தைப் பார்க்காதீர்கள் கொள்கைகளை பாருங்கள் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இளையராஜாவிற்கு பாரத ரத்னா விருது வழங்குவதில் எங்களுக்கும் பெருமை தான், விளையாட்டுத்துறையில் சச்சின் டெண்டுல்கருக்கு கொடுக்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது இசைத்துறையில் இளையராஜாவை விட சாதனையாளர்கள் இதுவரை இல்லை.

அதே சமயம் தனிப்பட்ட முறையில் வருத்தம் இருக்கிறது. சச்சின் டெண்டுல்கருக்கு கொடுத்த மரியாதையை வ.உ.சிதம்பரனார், பாரதியார் ஆகியோருக்கு தரவில்லை. சச்சின் டெண்டுல்கரை விட பாரதியாரும் வ.உ.சிதம்பரனாரும் இழிவாகப் போய்விட்டார்களா?

இளையராஜாவை இசை அமைப்பாளராக பார்ப்பதை விட, நாங்கள் அவரை இசை இறைவனாக தான் பார்க்கிறோம். அவரது பெயரில் விருது வழங்குவது எனக்கு பெருமை தான். முதலில் அவருக்கு நான் தான் பாராட்டு விழா எடுப்பதாக இருந்தேன். மாநில அரசு பாரதிராஜா போன்ற திரை கலைஞர்களையும் கௌரவப்படுத்தி இருக்க வேண்டும்.

திரையில் பார்த்தவர்கள் நேரில் வரும்பொழுது கூட்டம் வரத்தான் செய்யும். நாங்களும் சிறு வயதில் எம்ஜிஆர் போன்றவர்களை காண்பதற்கு மணிக்கணக்கில் காத்துக் கிடந்தோம். பிறகு அவர் வராமல் நாங்கள் ஏமாந்தும் போனோம். என் சகோதரர் அஜித், ஐயா ரஜினி, நயன்தாரா ஆகியோர் வந்தாலும் இதைவிட அதிக கூட்டம் வரும். கூட்டத்தைப் பார்க்காதீர்கள் கொள்கைகளை பாருங்கள்.

கனிம வள கொள்ளையை தடுப்பதற்கு ஒரே வழி என்னை அதிகாரத்தில் அமர வைப்பது தான். இது போன்ற கேள்வியை என்னிடம் கேட்பதைவிட நேற்று கூட்டம் கூடிய அவரிடம் (விஜய்) கேளுங்கள். மலைகள் என்பது என் தாயின் மார்பு போன்று பூமித்தாயின் மார்பு. குவாரி ஓனர்கள் எல்லாம் என்னிடம் ஒரு நாள் சிக்கி பாடுபடுவார்கள்.

கர்நாடகாவில் திமுகவின் கூட்டணி ஆட்சி தான் நடக்கிறது. கர்நாடகாவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் பொழுது உங்களால் முடியாதா? கர்நாடகாவில் ராமசாமி பிறக்கவும் இல்லை, சமூக நீதியும் பேசவில்லை. முற்போக்கு பகுத்தறிவு என்று எதையும் பேசாத அவர்கள் சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கும் பொழுது உங்களால் எடுக்க முடியாதா? அவ்வாறு எடுத்தால் நீங்கள் ஏமாற்றியது தெரியும்.

என்னை யாருடனும் கூட்டணி வைக்க வேண்டாம் என்று கட்சியின் தொண்டர்களும் பொதுமக்களும் கூறுகிறார்கள். நான் கூட்டணி வைக்காமல் தோற்றுப் போனதில் ஏதேனும் நஷ்டம் உள்ளதா? என்னை விட அதிகாரத்தில் வலிமையாக இருக்க கூடியவரை காட்ட முடியுமா? 2026-இல் என் கையில்தான் ஆட்டம் இருக்கும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *