கரிசல் இலக்கியத்தின் பெரும் ஆளுமை எழுத்தாளர் பூமணி காலமானார்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தில் 1947 மே 12-ஆம் தேதி பிறந்த பூமணியின் இயற்பெயர் பூ. மாணிக்கவாசகம். தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையில் பணியாற்றி, துணைப் பதிவாளராக ஓய்வு பெற்ற அவர், அதன் பின்னர் முழுநேர இலக்கியப் பணியில் தன்னை அர்ப்பணித்தார்.

கரிசல் மண்ணின் மக்களின் வாழ்வியல், சமூக உறவுகள், சாதிய அமைப்பு, உழைப்பாளர்களின் வாழ்க்கை ஆகியவற்றை யதார்த்தமாக தனது படைப்புகளில் பதிவு செய்து தனித்துவமான இலக்கிய அடையாளத்தை உருவாக்கியவர் பூமணி.

அவரது ‘பிறகு’, ‘வெக்கை’, ‘நைவேத்யம்’, ‘வரப்புகள்’, ‘வாய்க்கால்’, ‘அஞ்ஞாடி’ உள்ளிட்ட படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன. குறிப்பாக ‘அஞ்ஞாடி’ நாவலுக்காக 2014-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அவருக்கு வழங்கப்பட்டது.

மேலும், அவரது ‘வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான ‘அசுரன்’ திரைப்படம் தேசிய அளவில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதன் மூலம் பூமணியின் படைப்புகள் புதிய தலைமுறையினரிடமும் பரவலாக சென்றடைந்தன.

பூமணியின் மறைவுக்கு எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் அழியாதது என பலரும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதேவேளை, தமிழ்நாடு அரசு சார்பில் பூமணிக்கு உரிய அரசு மரியாதை செலுத்தப்படுவதோடு, அவரது நினைவாக நினைவு அரங்கம் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் எழுத்தாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வலுத்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *