இந்தியா தரமான கம்பேக்…
இங்கிலாந்தின் பர்மிங்காம் மைதானத்தில் நேற்று (14/07/2026) நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 258 ரன்கள் எடுத்தது.
259 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மூத்த வீரர்களான ரோகித் சர்மா 11 ரன்களிலும், விராட் கோலி 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில், 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உட்பட 80 ரன்கள் விளாசினார். சதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக சதமடிக்கும் வாய்ப்பை இழந்து பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறினார்.
அவர் வெளியேறிய சிறிது நேரத்திலேயே ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல். ராகுல் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய அணி தடுமாறியது.
அப்போது கைக்கோர்த்த அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் அரைசதம் விளாசியதுடன், 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
டி20 தொடரை 0-4 என தவறவிட்ட நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

