தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு… 15 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!
xசென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சுமார் 7.6 கி.மீ உயரத்தில் கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது.
மேலும், சுமார் 0.9 கி.மீ உயரத்தில் தெற்கு தெலங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை ராயலசீமா மற்றும் தமிழகப் பகுதிகள் வழியாக காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், ஏனைய தமிழகப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

