80s காலத்துக்கு திரும்பிய AI! இணையத்தை கலக்கும் ரெட்ரோ Photo Trend
சமூக வலைதளங்களில் அவ்வப்போது வித்தியாசமான AI புகைப்பட ட்ரெண்டுகள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், தற்போது 1980களின் சினிமா மற்றும் ஃபேஷன் பாணியை மீண்டும் உருவாக்கும் ‘80s Photo Trend’ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்த ட்ரெண்டில் சினிமா பிரபலங்கள் முதல் சமூக வலைதள பயனர்கள் வரை பலரும் ஆர்வத்துடன் இணைந்து வருகின்றனர். 80களின் திரைப்படங்களில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள் மற்றும் அக்காலகட்டத்தின் ஃபேஷனை நினைவுபடுத்தும் வகையில் AI மூலம் புகைப்படங்களை உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர்.
அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் 80களின் திரைப்பட தோற்றத்தை பிரதிபலிக்கும் AI புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். அதேபோல், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பிரபலங்களும் ரெட்ரோ தோற்றத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சந்தீப் கிஷன், சினேகா, மீனா, பாவனா உள்ளிட்ட பல பிரபலங்களும் 80களின் ஸ்டைலில் தங்களது புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
80s Photo Trend ஏன் வைரல்?
1980கள் இந்திய சினிமாவில் தனித்துவமான அழகியலை கொண்டிருந்த காலகட்டமாகும். ஹீரோக்களின் ஹேர் ஸ்டைல், ஹீரோயின்களின் ஆடை அலங்காரம், வண்ணமயமான உடைகள், ஸ்டுடியோ போட்டோஷூட்கள் என அக்காலத்தின் ஒவ்வொரு அம்சமும் தனி அடையாளத்தை கொண்டிருந்தது.
குறிப்பாக, அப்போது பயன்படுத்தப்பட்ட ஃபிலிம் கேமராக்களின் நிறத்தன்மை மற்றும் புகைப்படங்களின் இயல்பான தோற்றம் இன்றைய தலைமுறையினரிடையே கூட தனி வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், AI தொழில்நுட்பம் மூலம் அந்த காலகட்டத்தின் தோற்றத்தை தற்போது எளிதாக மீண்டும் உருவாக்க முடிகிறது. “நாம் 80களில் பிறந்திருந்தால் எப்படி இருந்திருப்போம்?” என்ற கற்பனையை புகைப்படமாக பார்க்கும் வாய்ப்பை இந்த ட்ரெண்ட் வழங்குகிறது.
அதேநேரத்தில், 80களின் சினிமாவைப் பார்த்து வளர்ந்தவர்களுக்கு இந்த புகைப்படங்கள் பழைய நினைவுகளை மீண்டும் நினைவுபடுத்துகின்றன.
ரெட்ரோ லுக்கையும், நவீன AI தொழில்நுட்பத்தையும் இணைத்திருப்பதே ‘80s Photo Trend’ சமூக வலைதளங்களில் கவனம் பெறுவதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

