இந்தியாவிற்கு டஃப் கொடுத்த ஓமன்… 8 பவுலர்களை பயன்படுத்திய கேப்டன் ‘ஸ்கை’

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஓமன் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில், இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
17ஆவது ஆசியக்கோப்பை போட்டிகள் கடந்த செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ’ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் அணிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல, ‘பி’ பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
தொடரின் 12ஆவது போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணியும், ஓமன் அணியும் மோதவுள்ளன. இந்திய அணி ஏற்கனவே சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிவிட்டதால், இந்த போட்டி சம்பிரதாய போட்டியாக நடைபெற்றது.
முன்னதாக, இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றி கண்டிருந்தது. அதே சமயம் ஓமன் அணி இந்த தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராகவும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியிலும் தோல்வி அடைந்திருந்தது.
இந்நிலையில், இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். கடந்த இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக சஞ்சு சாம்சன் 56 (45 பந்துகள்) ரன்களும், அபிஷேக் சர்மா 38 (15 பந்துகள்) ரன்களும், திலக் வர்மா 29 (18 பந்துகள்) ரன்களும் எடுத்தனர். ஓமன் அணி தரப்பில் ஷா பைசல், ஜிதன் ராமனந்தி மற்றும் ஆமீர் கலீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய ஓமன் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜதிந்தர் சிங் 32 ரன்களில் வெளியேறினார். சிறப்பாக ஆடிய ஆமிர் கலீம் 64 ரன்கள் எடுத்தார். அதேபோல் ஹமித் மிஷ்ரா 51 ரன்கள் எடுத்து ஓமன் அணி வீரர்கள் இந்திய பந்துவீச்சாளர்களை நேர்த்தியாக எதிர்கொண்டு, சிறந்த பார்ட்னர்ஷிப்களை அமைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி பரிச்சார்த்த முயற்சியாக 8 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது. ஆனாலும், முழுநேர பந்துவீச்சாளரான அர்ஷதீப் சிங்கின் ஓவரை ஓமன் வீரர்கள் அடித்து நொறுக்கினர். 4 ஓவர்கள் வீசிய அர்ஷதீப் சிங் 37 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
ஆனால், ஒரு விக்கெட் கைப்பற்றியதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். ஷிவம் துபே 3 ஓவர்கள் வீசி 31 ரன்களை வாரி வழங்கினார்.
20 ஓவர்கள் முழுமையாக ஆடிய ஓமன் அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 167 ரன்கள் எடுத்தது. இதனால், 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. ஆட்டநாயகன் விருது சஞ்சு சாம்சனுக்கு வழங்கப்பட்டது. நாளை நடைபெறும் ‘சூப்பர் 4’ சுற்றில் பாகிஸ்தான் உடன் இந்தியா பலப்பரீட்சை நடத்தவுள்ளது.