மிரட்டிப் பார்க்கிறீர்களா சி.எம்.சார்?… அதுக்கு நான் ஆள் இல்லை… நாகையில் சவால் விட்ட விஜய்

முதலமைச்சர் தன்னை மிரட்டிப் பார்ப்பதாகவும், ஆனால் அந்த மிரட்டலுக்கு எல்லாம் தான் பயப்படப்போவதில்லை என்றும் தவெக தலைவர் விஜய் நாகை பிரசாரத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், ‘மக்களுடன் சந்திப்பு’ என்ற பெயரில் தமது முதல் சுற்றுப்பயணத்தை கடந்த 13ஆம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்குகினார். தொடர்ந்து டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்கள் சந்திப்பு கூட்டம் பிரச்சாரங்களை நடத்த திட்டமிடப்பட்டது.
ஆனால், விஜய்யின் பிரசாரத்தின்போது திருச்சியிலும், அரியலூரிலும் ஏராளமான ரசிகர்களும், தொண்டர்களும் வழிநெடுக குவிந்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்தாலும், அரியலூரில் பிரசாரத்தை முடிக்கவே நள்ளிரவு வரை எடுத்துக் கொண்டதாலும், பெரம்பலூரில் மேற்கொள்ள இருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.
நேரம் இல்லாத காரணத்தால் அன்று இரண்டு மாவட்டங்களில் மட்டும் தனது பரப்புரையை மேற்கொண்டதால், தவெக தலைவர் விஜய் இரண்டாம் கட்ட பிரசாரத்தின்போது, இரண்டு மாவட்டங்களுக்கு மட்டும் தனது பரப்புரையை மேற்கொள்ள திட்டமிட்டு சென்று கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், இன்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பரப்புரையை மேற்கொண்டார். அதற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமான மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு சென்றடைந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக நாகப்பட்டினம் சென்றார்.
நாகப்பட்டினத்தில் காலை 11 மணியளவில் விஜய் தனது பரப்புரையை மேற்கொள்வதாக குறிப்பிடப்பட்டது. இதனால், விஜய்யின் பரப்புரையைக் கேட்க பல்லாயிரக்கணக்கான மக்கள் புத்தூர் அண்ணாசிலை அருகே குவிந்திருந்தனர்.
குறிப்பாக, விஜய் பரப்புரை செய்யும் இடம் மக்கள் கூட்டத்தால் திக்குமுக்காடியது. மேலும், விஜய்யின் பரப்புரை வாகனத்தை சூழ்ந்துக்கொண்டு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். சில தொண்டர்கள் மரத்தின் மீது ஏறியும், பேனர்களை கிழித்து அந்த கம்பியின் மீது ஏறி நின்று விஜய்யை ஆவலோடு பார்த்தனர்.
பெரும் கூட்டத்தால், சிக்கிய சிலபேர் மயக்கமடைந்தனர். அவர்கள் தவெக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் மதியம் சுமார் 01.30 மணியளவில் விஜய் தனது உரையை தொடங்கினார்.
தொடர்ந்து பேசிய விஜய், ’எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்? எல்லோருக்கும் வணக்கம். அண்ணாவுக்கு ஒரு வணக்கம், பெரியாருக்கு ஒரு வணக்கம். அண்ணை வேளாங்கண்ணி ஆசியோடு, கடல்தாய் குடியிருக்கும் நாகை மண்ணில் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும், மீனவ நண்பனாக இருக்கின்ற எனது அன்பு வணக்கங்கள்.
மீன் பிடி தொழில், விவசாயம் என அனைத்து உழைக்கும் மக்கள் இருக்கின்ற ஊர் நாகப்பட்டனம். மதச் சார்ப்பின்மைக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்ற நாகை மக்களுக்கு சிறப்பு வணக்கங்கள்! தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மீன் ஏற்றுமதி செய்யும் இடமான நாகப்பட்டினத்தில் நவீன வசதிகள் ஏதும் இல்லை. வீடுகள் வசதிகள் இன்றி காணப்படுகிறது.
திமுகவினர் அடுக்கு மொழிகள் பேசி, பேசி மக்களை ஏமாற்றி வருகின்றனர். காதுகளில் ரத்தம் வந்தது தான் மிச்சம். இலங்கை கடற்படையால் நமது மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. மீனவர்களுக்கு துணையாக இருக்க வேண்டியது நமது கடமை. நாகை மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து 14 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, பொதுக்கூட்டம் நடத்தினேன்.
நான் அரசியல் களத்துக்கு புதியவன் அல்ல. நான் எப்பொழுதோ வந்துவிட்டேன். முன்னர் விஜய் மக்கள் இயக்கமாக உங்களை சந்தித்தேன். தற்போது, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கமாக உங்களுடன் இருக்கிறேன். அதுதான் வித்தியாசம். என்றென்றைக்கும் மக்கள் பக்கம் இருக்கிறேன். அதேபோல், தலைவனை இழந்து நின்கின்ற ஈழத் தமிழர்களும் நமக்கு முக்கியம்.
பேருக்கு கடிதம் எழுதிவிட்டு கப்சிப் என இருந்துவிட நாம் ஒன்றும் திமுக கிடையாது. நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு இருக்கின்ற இறால் பண்ணைகளை முறைப்படுத்த வேண்டும். அப்போது தான், மீனவர்களின் வாழ்க்கையும், விவசாயகளின் வாழ்க்கையும் பாதுகாக்கப்படும்” என்றார்.
தொடர்ந்து பேசிய விஜய், “நான் சனிக்கிழமைகளில் மட்டும் உங்களை சந்திக்கிறேன் என்று கேலி செய்கிறார்கள். உங்களுக்கு தொந்தரவு கூடாது என்பதால் தான் வார இறுதிநாளில் உரையாற்றுகிறேன். முக்கியமாக உங்கள் வேலைகளை தொந்தரவு செய்யக்கூடாது என்பதால் இந்த சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டது.
என்னுடைய பிரசாரத்திற்கு எண்ணற்ற கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர். எனக்கு பரப்புரை மேற்கொள்ள விதிக்கும் கட்டுப்பாடுகள் மாதிரி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு இப்படி கட்டுப்பாடு விதிப்பீர்களா? பாஜகவின் மறைமுக உறவுக்காரர்கள்தான் திமுகவினர்.
நான் அரியலூரில் பிரசாரம் மேற்கொண்டபோது மின்சாரத்தை துண்டித்தார்கள். திருச்சியில் மைக்கிற்கு செல்லும் மின்கம்பியை துண்டித்து தொந்தரவு கொடுத்தார்கள். நேரடியாகவே கேட்கிறேன், எங்களை மிரட்டிப் பார்க்கிறீர்களா சி.எம். சார். இந்த மிரட்டலுக்கு எல்லாம் பயப்படுபவன் விஜய் கிடையாது. பெரம்பலூர் மக்களை ஒருநாள் நிச்சயம் விரைவில் சந்திப்பேன்” என்று தெரிவித்தார்.