OPS-EPS மோதல் தீவிரம்: அதிமுகவில் இணையமாட்டோம், புதிய அரசியல் திருப்பம்
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இந்த சூழலில், அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் (OPS) மற்றும் அதிமுகவின் பொதுச்செயலாளர் தலைவர் எடப்பாடி பழனிசாமி (EPS) இடையேயான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது.
அதிமுக-பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் இணைவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், “எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அதிமுகவில் இணையமாட்டோம்” என ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சுமார் 4 மாதங்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை அரசியல் போட்டி தற்போது வரை உறுதியாகியுள்ளது. இந்த பின்னணியில், அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள் மோதல்கள் தேர்தல் அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
2016ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் அதிகாரப் போட்டி தீவிரமடைந்து பல பிளவுகள் ஏற்பட்டன. இதன் காரணமாக ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் தனித் தனி அணிகளாக பிரிந்து செயல்பட்டு வந்தனர். பின்னர், மீண்டும் அதிமுகவில் இணைய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இந்த மூவரையும் மீண்டும் கட்சியில் இணைக்கும் வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்தியிருந்தார்.
இந்த நிலையில், சென்னை வேப்பேரியில் ஆதரவாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “வரும் நாட்களில் எடப்பாடி பழனிசாமிக்கு தகுந்த அரசியல் பாடம் புகட்டப்படும்” என தெரிவித்தார். மேலும், அதிமுகவை தவிர்த்து வேறு கூட்டணிகளில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும், எந்த சூழலிலும் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் அவர் கூறினார்.

