த.வெ.க. செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்: மேடைக்கு வந்த விஜய்க்கு விசில் அடித்து உற்சாக வரவேற்பு
சென்னை: தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்துடன் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.
அதேபோல், தாங்கள் செயல்படுத்திய மகளிர் நலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதாகக் கூறும் ஆளும் கட்சியான தி.மு.க., மீண்டும் வெற்றி பெறும் நம்பிக்கையில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக, ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.
இந்த அரசியல் சூழலில், நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) முதன்முறையாக சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் மூலம் அரசியல் கருத்துகளை வெளிப்படுத்தி வரும் விஜய், சாத்தியமான மற்றும் நடைமுறைப்படுத்தக்கூடிய திட்டங்களையே மக்களுக்காக நிறைவேற்றுவோம் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இதனிடையே, பனையூரில் உள்ள த.வெ.க. கட்சி அலுவலகத்தில் கடந்த சில நாட்களாக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மற்றும் தேர்தல் பிரசார குழு உள்ளிட்ட முக்கிய ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்புக்கு பிறகு விஜய் பொது நிகழ்வுகளில் பங்கேற்காமல் இருந்து வந்த நிலையில், மாமல்லபுரத்தில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்றது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற த.வெ.க. செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் மேடைக்கு வந்தபோது, தொண்டர்கள் விசில் அடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த கூட்டத்தில் அரசியல் மற்றும் தேர்தல் பணிகள் தொடர்பான பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விஜய் பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 3 ஆயிரம் பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பங்கேற்பதற்காக டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்பட்டு, அதில் உள்ள கியூஆர் கோடை ஸ்கேன் செய்த பின்னரே அனுமதி அளிக்கப்பட்டது. கூட்டத்திற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் மேற்கொண்டனர்.
முன்னதாக, பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டிருந்த அறிக்கையில், “25-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாமல்லபுரம் போர்பாயிண்ட்ஸ் பை ஷெரட்டனில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்து கொள்ளும் மாநில மற்றும் மாவட்ட அளவிலான செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, த.வெ.க. நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “26-ஆம் தேதி சென்னையிலிருந்து த.வெ.க. பிரசார பயணம் தொடங்க உள்ளது. 234 தொகுதிகளிலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்களுடன் தேர்தல் பணிகளை மேற்கொள்வோம். கூட்டணி குறித்து அல்லது தனித்து போட்டியிடுவது குறித்து விஜய் விரைவில் அறிவிப்பார்” என கூறினார்.
234 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறும் நோக்கில் த.வெ.க. தேர்தல் வியூகங்களை தீவிரமாக செயல்படுத்தி வரும் நிலையில், ‘விசில்’ சின்னம் கிடைத்திருப்பது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

