லட்சிய ஜனநாயக கட்சியின் தமிழ்நாடு மாநில பொறுப்பாளர்கள் அறிமுக விழா: 120 பேருக்கு நியமனச் சான்றிதழ் வழங்கல்
லட்சிய ஜனநாயக கட்சியின் தமிழ்நாடு மாநில பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் அறிமுக விழா, மறைமலை நகரில் உள்ள ஜே.பி. பேலஸ் அரங்கில் 12.07.2026 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும் காமராஜர் நகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா முன்னிலை வகித்தார்.
விழாவில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான 120 பொறுப்பாளர்களுக்கு நியமனச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பல்வேறு துறைகளுக்கான பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள், கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினிடம் வாழ்த்து பெற்று தங்களது நியமன ஆணைகளை பெற்றுக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ. ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், தமிழகத்தில் கடன் சுமை அதிகரித்து வருவதாகவும், வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நியமனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளால் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) மீது மக்களின் நம்பிக்கை குறைந்துள்ளதாகவும், தமிழக அமைச்சர்களுக்கு எந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும் என்ற இங்கிதம் இல்லை என்றும் விமர்சித்தார்.
திராவிடக் கட்சிகள் படிப்படியாக வலுவிழந்து வருவதாகக் கூறிய அவர், மக்கள் விரும்பும் மாற்றத்தை லட்சிய ஜனநாயக கட்சி வழங்கும் என தெரிவித்தார்.

