இந்தியா-ரஷியா உச்சி மாநாட்டை முடித்து அதிபர் புதின் ரஷியா திரும்பினார்
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தனது 2 நாள் அரசு முறை இந்திய பயணத்தை நிறைவு செய்து நேற்று இரவு ரஷியா திரும்பினார். புதன்கிழமை இரவு டெல்லி வந்த அவரை பிரதமர் நரேந்திர மோடி தானே விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார்.
பயணத்தின் போது அதிபர் புதின் பல்வேறு அரசியல் மற்றும் இருதரப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதில் முக்கியமாக, நேற்று நடைபெற்ற 23வது இந்தியா–ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும் புதினும் இணைந்து கலந்துகொண்டனர். மாநாட்டுக்குப் பின் இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று, எதிர்கால ஒத்துழைப்புகள் பற்றி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டனர்.
இந்த பயணத்தின் போது பாதுகாப்பு, வர்த்தகம், ஆற்றல் உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா-ரஷியா இடையிலான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் நாடுகளுக்கிடையேயான நீண்டகால உறவு மேலும் வலுப்பெறும் என அரசுத் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 நாள் அரசு பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த புதின், நேற்று இரவு ரஷியா நோக்கி புறப்பட்டார். அவரை விமான நிலையத்தில் வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் நேரில் சென்று வழியனுப்பினார்.

