ஆப்பிரிக்காவில் புதிய பெருங்கடல் உருவாகி வரும் அதிர்ச்சி தகவல்
பூமியில் ஒரு புதிய பெருங்கடல் உருவாகும் செயல்முறை தற்போது வேகமெடுத்து வருகிறது. இதனால் ஆப்பிரிக்கக் கண்டம் இரண்டாகப் பிரிய வாய்ப்பு அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. முன்பெல்லாம் இந்த மாற்றம் 50 இலட்சம் முதல் 1 கோடி ஆண்டுகள் எடுக்கும் என கருதப்பட்டாலும், சமீபத்திய கண்டுபிடிப்புகள் இந்த நிகழ்வு அதைவிட மிக விரைவாக — ஏறக்குறைய 10 இலட்சம் ஆண்டுகளில், சில நேரங்களில் அதிலும் குறைவாக — நடைபெறலாம் எனக் கூறுகின்றன.
இந்த கருத்தை முன்வைத்தவர், அமெரிக்க துலேன் பல்கலைக்கழகப் புவி அறிவியல் நிபுணர் டாக்டர் சிந்தியா எபிங்கர். 1980 முதல் இந்த துறையில் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வரும் அவரின் பணிகள் மிக முக்கியமானவை.
அரேபியா, நுபியன் (ஆப்பிரிக்கா) மற்றும் சோமாலியன் எனப்படும் மூன்று புவித் தகடுகளின் சந்திப்புப் பகுதி ‘அஃபார்’ என அழைக்கப்படுகிறது. புதிய கடல் உருவாகும் மையம் இதுவே. எபிங்கர் தனது ஆய்வில், கிழக்கு ஆப்பிரிக்காவில் காணப்படும் அனைத்து தீப்பாறைகளும் ஒரே ‘வெப்ப புள்ளி’ (hot spot) எனப்படும் பகுதியிலிருந்து கிடைத்தவை என்பதை முதன்முறையாக கண்டறிந்தார். பூமியின் உட்பகுதியில் மிக அதிக வெப்பமுள்ள சில இடங்களில் இருந்து மேலே எழும் மாக்மாவே இத்தீப்பாறைகளை உருவாக்குகிறது.
1998 ஆம் ஆண்டு ‘நேச்சர்’ இதழில் வெளியான அவரது ஆய்வு அறிவியல் உலகில் பெரும் கவனத்தை ஈர்த்தது. அந்த ஆய்வு 900 முறை மேல் பிற ஆராய்ச்சியாளர்களால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

