இந்திய பங்குச்சந்தையில் ரஷ்யா முதலீடு: ரூ.5 லட்சம் கோடி வர வாய்ப்பு

புதுடெல்லி:
இந்தியா-ரஷ்யா இடையேயான வர்த்தக உறவில் முக்கிய திருப்பமாக, ரஷ்யா இந்திய பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்யும் புதிய திட்டம் உருவாகியுள்ளது. ரஷ்யாவிடம் இந்திய வங்கிகளில் தேங்கி கிடக்கும் ரூபாய் தொகையை, இந்திய பங்குச்சந்தையில் முதலீடாக மாற்ற இரு நாடுகளும் இணைந்து நடைமுறை உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் காரணமாக, ரஷ்யா இந்தியாவிடமிருந்து வாங்கும் கச்சா எண்ணெய்க்கான பணம் டாலரில் செலுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், அந்த தொகை ‘வோஸ்ட்ரோ கணக்குகள்’ மூலம் ரூபாயாக இந்திய வங்கிகளில் குவிந்து வருகிறது. ஆண்டுதோறும் சுமார் 4 முதல் 5 லட்சம் கோடி ரூபாய் வரை இவ்வாறு தேங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சிக்கலுக்கு தீர்வாக, ரஷ்யாவின் உபரி ரூபாயை நிஃப்டி (NIFTY) 50 பங்குகளில் முதலீடு செய்யும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முன்னோட்டமாக, ரஷ்ய அரசுக்குச் சொந்தமான பெரிய வங்கியான ஸ்வெர்பேங்க், இந்திய நிறுவனத்துடன் இணைந்து ‘ஃபர்ஸ்ட் இந்தியா’ என்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை தொடங்க முன்வந்துள்ளது.

ஆரம்பத்தில் மியூச்சுவல் ஃபண்ட் வழியாக முதலீடு செய்யப்படும் இந்த முயற்சி, எதிர்காலத்தில் நேரடி பங்கு முதலீடுகளாக விரிவடையலாம் என தெரிவிக்கப்படுகிறது. சுமார் 5 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்புடன் உலகின் முக்கிய பங்குச்சந்தைகளில் ஒன்றாக உள்ள இந்திய சந்தை, ரஷ்யாவுக்கு முக்கிய முதலீட்டு தளமாக மாறுகிறது.

இந்த திட்டம், இரு நாடுகளுக்கும் Win-Win வாய்ப்பாக அமையும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில், டாலர் அல்லாத வர்த்தகத்திற்கு தடையிடும் மேற்கத்திய முயற்சிகளுக்கு இது ஒரு தெளிவான பதிலாகவும், BRICS நாடுகளுக்கிடையேயான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *