சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் – படக்குழு அறிவிப்பு
சென்னை: ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான காரணங்களையும் படக்குழு விளக்கியுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில், சிவகார்த்திகேயனுடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இது அவரின் 100-வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல், ‘பராசக்தி’ சிவகார்த்திகேயனின் 25-வது படம் என்பதால் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அண்மையில் வெளியான ‘பராசக்தி’ படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் படத்தின் கருப்பொருளை வெளிப்படுத்தும் வகையில், அந்த காலகட்டத்தை பிரதிபலிக்கும் சிறப்பு செட் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் கதைக்களம் 1960-களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் அமைந்துள்ளது. இதில், சிவகார்த்திகேயன் மற்றும் அதர்வா சகோதரர்களாக நடித்துள்ளனர். இருவருக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்படுவதாக கதைக்களம் நகர்கிறது. படத்தில், சிவகார்த்திகேயன் அரசு ஊழியராகவும், அதர்வா இன்ஜினியரிங் படித்து வரும் மாணவராகவும் வருகிறார். மேலும், அமைச்சரின் மகளாக நடித்துள்ள ஸ்ரீலீலாவை சிவகார்த்திகேயன் காதலிப்பதாகவும், ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ம் தேதி ‘பராசக்தி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது, திரைப்பட விநியோகஸ்தர்கள் (Distributors) மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று, படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி 14-ம் தேதிக்கு பதிலாக, வரும் ஜனவரி 10-ம் தேதி ‘பராசக்தி’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

