9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசில் 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய பணியிடமாற்றங்களை மேற்கொண்டு அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.

அதன்படி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக பணியாற்றி வந்த சத்யபிரத சாகு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நில நிர்வாக ஆணையராக இருந்த பழனிசாமி, கூட்டுறவுத்துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையராக பணியாற்றிய கஜலட்சுமி, நில நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஆக இருந்த கிரண் குராலா, போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அறிவியல் நகரம் துணைத் தலைவராக பணியாற்றிய தேவ் ராஜ் தேவ், தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வரலாற்று ஆராய்ச்சி மற்றும் ஆவணக் காப்பக ஆணையராக இருந்த ஹர் சஹாய் மீனா, அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நீர்வளத்துறை சிறப்பு செயலாளராக இருந்த மலர்விழி, வரலாற்று ஆராய்ச்சி மற்றும் ஆவணக் காப்பக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக இருந்த கோபால சுந்தர ராஜ், அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி மற்றும் பயிற்சித் துறையின் தலைவர் மற்றும் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அரசு துணைச் செயலாளராக இருந்த பானோத் ம்ருகேந்தர் லால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த பணியிடமாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வரும் என அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *