புத்தாண்டு கொண்டாட்டம் முன்னிட்டு சென்னையில் விரிவான போக்குவரத்து மாற்றங்கள் – காவல்துறை அறிவிப்பு
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, சென்னையில் இன்று இரவு முதல் நாளை காலை வரை முக்கிய பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் மாற்றங்கள் அமல்படுத்தப்படுவதாக சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, காமராஜர் சாலையில் போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை இன்று இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும்.
மேலும், அனைத்து மேம்பாலங்களிலும் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.
மெரினா கடற்கரை உட்புற சாலை இன்று இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை மூடப்படும். அந்தச் சாலையில் வாகனங்களை நிறுத்தவும் அனுமதி வழங்கப்படாது.
வாகனங்களுக்கு மாற்றுப் பாதைகள்:
- அடையாறில் இருந்து காமராஜர் சாலை நோக்கி செல்லும் வாகனங்கள், கிரீன்வேஸ் சாலை – தெற்கு கால்வாய் சந்திப்பில் திருப்பி விடப்பட்டு, மந்தைவெளி – லஸ் – மயிலாப்பூர் வழியாக செல்லலாம்.
- டாக்டர் ஆர்.கே. சாலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கி செல்லும் வாகனங்கள், வி.எம். தெரு சந்திப்பில் திருப்பி விடப்பட்டு, சாந்தோம் சாலை – கிரீன்வேஸ் சாலை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- வாலாஜா சந்திப்பிலிருந்து காமராஜர் சாலை நோக்கி எந்தவொரு வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்படாது.
- பாரிஸ் சந்திப்பிலிருந்து காமராஜர் சாலை நோக்கி செல்ல விரும்பும் வாகனங்கள், ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை – வடக்கு கோட்டை சுவர் சாலை – முத்துசாமி பாலம் – அண்ணா சாலை வழியாக செல்லலாம்.
- தெற்கு கால்வாய் கரை சாலையிலிருந்து கலங்கரை விளக்கம் சந்திப்பு வரை உள்ள முழுச் சாலையிலும் வாகனப் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.
- கொடி மரச் சாலையில், இன்று இரவு 8 மணி முதல், வாலாஜா பாயிண்டிலிருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
- கிரீன்வேஸில் இருந்து வடக்கு நோக்கிச் செல்லும் பேருந்துகள், ஆர்.கே. மட் சாலையில் உள்ள ‘U’ திருப்பத்தில் திரும்பி, திருவேங்கடம் தெரு – ஆர்.கே. மடம் வழியாக இயக்கப்படும்.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், போக்குவரத்து மாற்றங்களை முன்கூட்டியே கவனத்தில் கொண்டு, மாற்றுப் பாதைகளை பயன்படுத்தி காவல்துறையுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

