போராட முயன்ற இடைநிலை ஆசிரியர்கள் கைது.
தமிழக அரசு பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு வகை ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ம் தேதி நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு வேறு வகை ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டதால், ஒருநாள் வித்தியாசத்தால் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த ஊதிய முரண்பாட்டால் சுமார் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலைமையை நீக்கி, ‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்க வேண்டும் என இடைநிலை ஆசிரியர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும், இதுவரை தமிழக அரசு அந்த கோரிக்கையை ஏற்கவில்லை.
இந்நிலையில், ஊதிய முரண்பாட்டை உடனடியாக களைய வேண்டும் என்றும், திமுகவின் 311-வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட இடைநிலை ஆசிரியர்கள் முயன்றனர்.
இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட முயன்ற இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்களை போலீசார் கைது செய்து அரசு பேருந்துகளில் ஏற்றி, அருகிலுள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

