தந்திரயான் குப்பம் கடலில் குளிக்க சென்ற மாணவன் பலி: உடல் முத்தியால்பேட்டை அருகே கரை ஒதுங்கியது
புதுச்சேரி அருகே தந்திரயான் குப்பம் கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற போது மாயமான 10ம் வகுப்பு மாணவரின் உடல், முத்தியால்பேட்டை அருகே கரை ஒதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை மணிக்கூண்டு பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவர் பெயின்டர் தொழில் செய்து வருகிறார். அவரது மகன் பரணிதரன், முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். தற்போது அரையாண்டு விடுமுறை என்பதால், நேற்று முன்தினம் காலை பெற்றோருக்கு தெரியாமல், தனது தம்பி மற்றும் வீட்டின் அருகே வசிக்கும் 5 நண்பர்களுடன் கோட்டக்குப்பம் தந்திரயான் குப்பம் பகுதிக்கு சென்று கடலில் குளித்துள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கிய 3 மாணவர்களை, அங்கு குளித்து கொண்டிருந்த வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி ஒருவர் துணிச்சலுடன் காப்பாற்றியுள்ளார். அதன் பின்னர், பரணிதரனை காப்பாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், கண் இமைக்கும் நேரத்தில் மாணவர் பரணிதரன் கடலில் மாயமானார். இதனைத் தொடர்ந்து, மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், நேற்று மாலை மாணவர் பரணிதரனின் உடல் புதுச்சேரி வைத்திகுப்பம் அருகே கரை ஒதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த முத்தியால்பேட்டை காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

