ஆட்டோ மீது பைக் மோதி 2 மாணவர்கள் உயிரிழப்பு
காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் மற்றும் காரைக்கால் நகரப்பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் இருவரும் பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகின்றனர். இந்நிலையில், இருவரும் கிழக்கு புறவழிச்சாலையில் உள்ள தேநீர் கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் எதிரே வந்த ஆட்டோ மீது மோதியுள்ளது. இதில், இருவரும் சுமார் 50 மீட்டர் வரை இழுத்து செல்லப்பட்டதால் தலை மற்றும் உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, உடனடியாக அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பொங்கலன்று 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் காரைக்கால் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

