பணி நிரந்தரம் கோரி புதுச்சேரியில் 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
புதுச்சேரி:
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஆசிரியர்கள் இன்று புதுச்சேரி கல்வித்துறை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
புதுச்சேரியில் கடந்த 2020ஆம் ஆண்டு, அந்நேரம் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், வேலைவாய்ப்பு அலுவலகம், தகுதி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் 288 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நிதி நிலைமையை காரணமாகக் காட்டி, அவர்களை அரசு ஒப்பந்த முறையில் பணி அமர்த்தியது. இதனைத் தொடர்ந்து, இவர்களின் ஒப்பந்தம் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட்டு வந்த நிலையில், தங்களை நிரந்தரமாக்க வேண்டும் என ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்காக ஆசிரியர்கள் பேரணி, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு சட்டமன்ற கூட்டத் தொடரின் போது, ஒப்பந்த ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். ஆனால் இதுவரை அரசு தரப்பில் எந்தவிதமான தீர்மானமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனிடையே, நாடு முழுவதும் ஒப்பந்த முறையில் பணியாற்றும் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த தீர்ப்பை பின்பற்றி தங்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, இன்று காலை கல்வித்துறை இயக்குநரை சந்திக்க ஒப்பந்த ஆசிரியர்கள் வந்தனர். ஆனால், கல்வித்துறை இயக்குநர் அவர்களை சந்திக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால், காலை முதலே கல்வித்துறை வளாகத்தில் ஆசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி நிரந்தரம் செய்யும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என அறிவித்து, தற்போது 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த போராட்டம் தொடர்பாக, புதுச்சேரி அரசு ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் கௌரவ தலைவர் சேஷாச்சலம், அரசின் உடனடி தலையீடு அவசியம் என வலியுறுத்தினார்.

