புதுச்சேரியில் லெனின் சிலை தார்ப்பாயால் மூடல் – போலீஸ் பாதுகாப்பு தொடர்ச்சி
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், நகர்ப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த லெனின் சிலையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தார்ப்பாய் கொண்டு முழுமையாக மூடியுள்ளனர். தொடர்ந்து, அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட லெனின் வீதியில், மணிமேகலை அரசு பள்ளி அருகே, கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென லெனின் சிலையை நிறுவியதாக கூறப்படுகிறது. இதற்கு, நீதிமன்ற உத்தரவின்படி புதிய சிலைகள் அமைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த நாள் முன்தினம் இரவு, லெனின் சிலையை அகற்றக் கோரி அதே இடத்தில் விநாயகர் சிலையை வைத்து, இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் லேசான தடியடி நடத்தி இரு தரப்பினரையும் கலைத்தனர்.
தொடர்ந்து, அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் குலோத்துங்கன் முன்னிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, சட்டவிரோதமாக சிலை நிறுவப்பட்டுள்ளதாகவும், அந்த இடம் முன்னர் இருந்த நிலையில் தொடர வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் லெனின் சிலையை தார்ப்பாய் கொண்டு முழுமையாக மூடினர். மூடப்பட்ட சிலையின் முன்பாக பேனர் வைக்க முயற்சித்தபோது, போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்குமிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், பேனர் வைக்காமல் கம்யூனிஸ்ட் கட்சியினர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
தற்போது, அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

