புத்தாண்டையொட்டி புதுச்சேரியில் நள்ளிரவு வரை இயங்கும் மதுபான கடைகளுக்கு கூடுதல் கட்டணம் – கலால் துறை அறிவிப்பு
புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, புதுச்சேரியில் மதுபான கடைகள் மற்றும் பார்கள் நள்ளிரவு வரை இயங்க அனுமதி வழங்கப்படுவதாக கலால் துறை அறிவித்துள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட விற்பனையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலால் துறை அறிவிப்பின் படி, பார் வசதி இல்லாத சில்லறை மதுபான விற்பனை கடைகள் இரவு 11.30 மணி வரை இயங்க ரூ.10,000 கட்டணம் செலுத்த வேண்டும். அதேபோல், பார் வசதியுடன் கூடிய சில்லறை விற்பனை கடைகள், வழக்கமான நேரத்துக்கு மேலாக கூடுதலாக 2 மணி நேரம், அதாவது நள்ளிரவு 1 மணி வரை செயல்பட ரூ.20,000 கட்டணம் செலுத்த வேண்டும்.
மேலும், சுற்றுலா பார்கள் (ரெஸ்ட்ரோ பார்கள்) இரவு 1 மணி வரை இயங்க அனுமதி பெற ரூ.10,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன், சிறப்பு விருந்து நிகழ்ச்சிகள் நடத்தப்படின், இரவு 11 மணி முதல் 1 மணி வரை நடைபெற ரூ.30,000 கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் கலால் துறை தெரிவித்துள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் அமைதியாகவும் ஒழுங்காகவும் நடைபெறுவதை உறுதி செய்ய, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் கலால் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

