புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டல் – ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிப்பு
புதுச்சேரி மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, இன்று நள்ளிரவு கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு நடைபெற உள்ள புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்காக, தமிழகம், பெங்களூர், சென்னை, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வருகை தருகின்றனர்.
இதனால் புதுச்சேரி நகரம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடற்கரை சாலை பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.
மேலும், காலை முதல் கடற்கரை சாலையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்காத வகையில் போலீசார் தடுப்புக் கட்டைகளை அமைத்துள்ளனர். தடுப்புகளை மீறி கடலில் இறங்கும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் வெளியேற்றி வருகின்றனர்.
பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு பேணும் நோக்கில், கடற்கரை சாலை முழுவதும் புதுச்சேரி போலீசார், என்சிசி மற்றும் என்எஸ்எஸ் மாணவர்கள் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு, தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

