விஜயைச் சந்தித்த செங்கோட்டையன் : தமிழக அரசியலில் புதிய திருப்பம்!
சென்னை: அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. செங்கோட்டையன், தனது பதவியை ராஜினாமா செய்த பின்னர், நடிகர் விஜய்யை சந்தித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் இல்லத்தில் செங்கோட்டையன் நேரில் சென்று சந்தித்ததாக தகவல்கள் உறுதிசெய்கின்றன. இதனால் அவர் அரசியல் திசைமாற்றம் மேற்கொள்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சமீபத்தில் அதிமுகவை ஒருங்கிணைக்கும் காலக்கெடு விதித்து கருத்து வெளியிட்ட செங்கோட்டையனை, கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவரை நீக்கியிருந்தார். பின்னர் பசும்பொன்னில், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை செங்கோட்டையன் சந்தித்த நிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.
இதனால் அதிமுக தலைமையிடம் அதிருப்தியடைந்த செங்கோட்டையன், விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் சேர வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளிவந்தன..
செங்கோட்டையனின் விஜய் சந்திப்பு மற்றும் ராஜினாமா தீர்மானம், வரவிருக்கும் அரசியல் மாற்றங்களுக்கு உந்துகோல் ஆகுமா என்பது தற்போது கவனத்துக்கு வந்துள்ளது.

