கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் இன்று (திங்கள்) உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி, கரூரில் த.வெ.க தலைவர் விஜய் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. விசாரணை தொடர்ந்துவந்த நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.
இன்று அந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், கரூர் நெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தது. மேலும், விசாரணை முன்னேற்றத்தை கண்காணிக்க நீதிபதி ரஸ்தோகி தலைமையிலான கண்காணிப்பு குழுவை அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், அந்த குழுவில் இரண்டு ஜூனியர் அதிகாரிகள் இணைக்கப்படுவார்கள் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.