முதல்வர் வேட்பாளராக விஜய் தேர்வு – த.வெ.க. செயற்குழு தீர்மானம்
சென்னை:
தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று காலை மகாபலிபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது. தலைவர் விஜய் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், பொதுச்செயலாளர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், மற்றும் பொருளாளர் வெங்கட்ராமன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசுகையில் தலைமை நிலைய பொதுச்செயலாளர் என். ஆனந்த்,
“2026ல் தளபதி விஜயை தமிழக முதல்வராக அமர்த்துவது நமது இலக்கு. மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை தரக்கூடிய ஒரே கட்சி த.வெ.க.,” எனக் கூறினார்.
கொள்கைப் பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ் பேசுகையில், “கரூர் நிகழ்வுக்குப் பிறகும் த.வெ.க. பல சவால்களை கடந்து வந்துள்ளது. ஊழல், சட்ட ஒழுங்கு சீர்கேடு, காவல்துறை அலட்சியம் ஆகியவற்றால் மக்கள் திமுக அரசால் அதிருப்தியில் உள்ளனர்,” என்றார். மேலும், “பாஜக ஜனநாயக அமைப்புகளை தமது கையில் வைத்து மக்களை ஏமாற்றுகிறது,” என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசும் போது, “கரூர் சம்பவம் ஒரு பெரிய சூழ்ச்சி. ஆனால் தளபதி விஜய் அமைதியின் மூலம் மௌன புரட்சியை உருவாக்கியுள்ளார். மக்களின் அன்பு நமது தலைவரின் பலம். 2026ல் அவர் தலைமையில் நல்லாட்சி அமையும்,” எனத் தெரிவித்தார்.கூட்டத்தின் முடிவில், உறுப்பினர்கள் ஒருமனதாக 2026 சட்டசபைத் தேர்தலில் த.வெ.க. தனித்து போட்டியிட்டு தளபதி விஜயை முதல்வராக அமர்த்த உறுதி எடுத்தனர்.

