எச்-1பி விசா மூலம் அமெரிக்கா பெரிதும் பயனடைந்தது – எலான் மஸ்க்
வாஷிங்டன்: எச்-1பி விசா திட்டத்தின் மூலம் அமெரிக்காவுக்கு, குறிப்பாக இந்தியப் பொறியாளர்கள் வழங்கிய பங்களிப்பு மறுக்க முடியாதது என்று டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பிரபல பங்கு வர்த்தக தளமான செரோதா நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் காமத் நடத்தும் ‘WTF’ பாட்காஸ்டின் 16வது பகுதி சமீபத்தில் வெளியானது. இதில் விருந்தினராக கலந்து கொண்ட மஸ்க், ஸ்டார்ட்-அப் சூழல், செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி, தானியங்கி வாகனங்கள், சூரிய சக்தி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல தலைப்புகளில் தனது கருத்துகளை பகிர்ந்தார்.
அமெரிக்க வளர்ச்சியில் இந்தியர்களின் தாக்கம்
பாட்காஸ்ட் உரையாடலின் போது எச்-1பி விசா குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மஸ்க், “இந்திய நிபுணர்கள் அமெரிக்காவுக்கு பல துறைகளில் பெரும் நன்மை செய்துள்ளனர். அதே சமயம், இந்த விசா திட்டம் சில நேரங்களில் தவறாகப் பயன்படுத்தப்பட்டதும் உண்மை” என்று தெரிவித்தார்.
ஜோ பைடன் ஆட்சிக் காலத்தில் குடிவரவு கொள்கைகளை விமர்சித்த அவர், அமெரிக்க வேலைவாய்ப்பு பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக கண்டிப்பான விசா கட்டுப்பாடுகள் அவசியம் எனத் தெரிவித்திருந்தார். ஆனால் டிரம்ப் ஆட்சி தொடங்கிய பின், வெளிநாடுகளிலிருந்து வருவோர் அமெரிக்க வளர்ச்சிக்கு உதவுகின்றனர் என்ற நிலைப்பாட்டை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த மாற்றத்தைக் குறித்து நிகில் காமத் கேள்வி எழுப்பியபோது, “சூழ்நிலைகளின் அடிப்படையில் கருத்துகளும் மாற வேண்டும். தற்போது எச்-1பி விசா அமெரிக்காவுக்கு பயன் அளித்திருப்பது தெளிவாகப் புலப்படுகிறது” என மஸ்க் விளக்கம் அளித்தார்.
எச்-1பி விசா தவறாகப் பயன்படுத்தப்படும் நிலை
எச்-1பி விசாவைச் சுற்றியுள்ள குறைகள் பற்றியும் அவர் கருத்து தெரிவித்தார். “திறமையான நிபுணர்கள் எப்போதுமே குறைவாக இருக்கும். அதனால் உலகம் முழுவதும் சிறந்தவர்களைத் தேட வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் சில நிறுவனங்கள் செலவு குறைக்க மட்டுமே வெளிநாட்டு ஊழியர்களை நியமிப்பது வருத்தகரமானது,” என்று அவர் கூறினார்.
அவரது நிறுவனங்கள் திறமைக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, சராசரி சந்தை ஊதியத்தை விட அதிகமாக வழங்குவதாகவும் மஸ்க் குறிப்பிட்டார். “எச்-1பி விசா திட்டத்தில் தவறுகள் இருப்பதை மறுப்பதில்லை. எனவே தேவையான கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். ஆனால் இந்த திட்டத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்ற கருத்துக்கு நான் ஆதரவு அளிக்கவில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

