Thailand-Cambodia | தாய்லாந்து – கம்போடியா போரால் இடம்பெயரும் மக்கள்!
தென்கிழக்கு ஆசியா: தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ராணுவ மோதல்களால், இரு நாடுகளிலும் பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது. எல்லைப் பகுதிகளில் நிலவும் பதற்றம் காரணமாக, தாய்லாந்தில் சுமார் 4 லட்சம் பேரும், கம்போடியாவில் சுமார் 5 லட்சம் பேரும் தங்களது வீடுகளை விட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருநாடுகளுக்கிடையேயான இந்த மோதல்களுக்கு மையக் காரணமாக, எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பழங்கால இந்து கோயிலான ‘தா முயென் தாம்’ (Ta Muen Thom) யாருக்கு சொந்தமானது என்ற உரிமைச் சர்ச்சை உள்ளது. இந்த கோயில் இருநாடுகளுக்கும் இடையேயான எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதால், அதன் நிர்வாக உரிமையைச் சுற்றி பல ஆண்டுகளாக மோதல்கள் நடைபெற்று வருகின்றன.
கடந்த டிசம்பர் 7ஆம் தேதி மீண்டும் தீவிரமடைந்த இந்த மோதலில், இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் பலர் காயமடைந்துள்ள நிலையில், எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இருநாடுகளும் தங்களது ராணுவப் படைகளை எல்லைப் பகுதிகளில் குவித்து வருவதால், அப்பகுதியில் நிலவும் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச சமூகம் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து வருகிறது.

