முதல் பாகத்தை விட 4 மடங்கு குவிந்த வசூல்-துரந்தர் சொல்வது என்ன?
இந்தியாவை சீர்குலைக்க எதிரிகள் தீட்டும் திட்டத்தை, இந்திய உளவுத்துறை தனது தியாகம், உழைப்பு, புத்திக்கூர்மையால் எவ்வாறு முறியடிக்கின்றது என்பது தான் படத்தின் ஒற்றைவரி. இந்தியாவை சீர்குலைக்கும் ஆயுதங்களாக கள்ளநோட்டு புழக்கம், போதை மருந்து விநியோகம், தீவிரவாதம், இந்திய அரசியலில் ஆதிக்கம் உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்துகின்றனர். தாவூத் இப்ராஹிம் இதில் முக்கிய பங்கு ஆற்றுகிறார்.
இதற்கு பதிலடியாக இந்திய உளவுத்துறை இந்த விவகாரத்தை எப்படி கையாண்டது, அதில் வெற்றி கிடைத்ததா என்பது மீதிக்கதை.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை தீவிரவாதிகளின் சதியை முறியடிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டதாக திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, உத்தரப்பிரதேச முன்னாள் எம்.பி. அத்திக் அகமது காவல்துறை பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டபோது, சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்த காட்சிகள், படத்தில் இடம்பெற்றுள்ளன.
பாகிஸ்தான் அரசியலில் இந்திய உளவுத்துறை செலுத்தும் ஆதிக்கம், பாகிஸ்தானின் பழங்குடிகளான பலூச்கள் சந்திக்கும் பிரச்னைகள், இந்திய உளவுத்துறைக்கு அவர்கள் கொடுக்கும் ஆதரவு ஆகியவை முன்னிலைப்படுத்தப்பட்டு காட்டப்பட்டுள்ளன. தாவூத் இப்ராஹிமை சாகவும் விடாமல், வாழவும் விடாமல் பழிதீர்க்கும் இந்திய உளவுத்துறை சம்பந்தப்பட்ட காட்சிகள் பலத்த கைதட்டல்களை பெறுகின்றன.
பாகிஸ்தானின் தீவிரவாதக் குழுக்களான லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஸ் இ முகமது போன்ற அமைப்பின் தலைவர்கள், தளபதிகளை இந்திய உளவுத்துறை விரட்டி விரட்டி வேட்டையாடும் காட்சிகள் ரசிகர்களை சுறுசுறுப்பு அடையச் செய்கிறது.
இந்திய உளவுத்துறை பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐஎஸ்ஐ தலைமை அலுவலகம் வரை எப்படி ஊடுருவி உள்ளது, அந்நாட்டின் பிரதமர் அலுவலகத்தில் எப்படி ஆதிக்கம் செலுத்துகிறது, பாகிஸ்தானின் அரசியல்வாதிகள் பணத்திற்காக எப்படி இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு அடிமைகளாக உள்ளனர், போன்ற பல நரேடிவ்களை இந்தப் படம் செட் செய்கிறது.
இந்தியாவின் ஜேம்ஸ்பாண்ட் என போற்றப்படும் தற்போதைய தேசிய ஆலோசகர் அஜித் தோவல் கடந்த பல ஆண்டுகளாக செய்த சாகசங்களை தொகுத்து, இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அஜித் தோவலாக நடித்த மாதவன் பெரிய அளவில் ஸ்கோர் செய்து, பான் இந்தியா பிரபலமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் தலைவர்கள் ஆசிப் அலி சர்தாரி, நவாஸ்சரீப் குறித்த காட்சிகள் இடம்பிடித்துள்ளன.
ஒட்டுமொத்தமாக படத்தின் மேக்கிங் என்பது பார்வையாளர்களை தளர்வடையச் செய்யாமல் பார்த்துக் கொள்கிறது. அதிகப்படியான சண்டைக்காட்சிகள் இருந்தாலும், படத்தின் வேகத்தை அவை அதிகரிக்கின்றன. முதல்பாகத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட காதல் காட்சிகள் 2ஆம் பாகத்தில், கணவன் – மனைவி இடையேயான அன்பாக புதிய பரிணாமம் பெறுகிறது. உண்மையான காதல் உண்மையின் பக்கம் நிற்கும் என்பதை கச்சிதமாக கடத்துகிறார் இயக்குநர்.
துரந்தர் முதல் பாகம் சுமார் 280 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் மட்டும் சுமார் 1000 கோடியும் வெளிநாடுகளையும் சேர்த்து சுமார் 1300 கோடி ரூபாய் வசூலித்தது. முதல்நாளில் துரந்தர் 1 சுமார் 27 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய நிலையில், துரந்தர் 2, முதல்நாளே இந்தி வெர்சன் மட்டும், சுமார் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சக்னிக் தளம் குறிப்பிட்டுள்ளது.
படம் வெளியாவதற்கே முன்பே, 100 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்றதாகவும், ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்திற்கு 150 கோடிக்கு படம் விற்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. தொழில்நுட்ப கோளாறு காரணமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் படம் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டு, தற்போது, வெளியாகியுள்ளது.
பெருவெற்றி பெற்ற சந்தீப் ரெட்டி வாங்காவின் அனிமல் திரைப்படம் முதல் நாளில் 63 கோடி ரூபாயும், சாருக்கானின் ஜவான் 65கோடி ரூபாயும் வசூலித்த நிலையில், அனைத்து சாதனைகளையும் முறியடித்து, துரந்தர் 2 முதல்நாளிலேயே 100 கோடி ரூபாயை கடந்துள்ளதாக என்டிடிவி சினிமா வலைதளம் தெரிவித்துள்ளது.

