127 கட்கள், 2 நாளில் OTT-யில் நீக்கம்… ‘சத்லஜ்’ படத்தில் என்ன இருக்கிறது?

எந்த ஒரு நடிகராவது, “என்னுடைய படத்தை திருட்டுத்தனமாக பாருங்கள்” என்று வெளிப்படையாகக் கூறியதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரு படத்திற்கு 127 கட்கள் விதிக்கப்பட்டால் அந்தப் படம் என்ன ஆகும்? ரிலீஸான இரண்டே நாட்களில் OTT-யிலிருந்து நீக்கப்பட்டதற்குக் காரணம் என்ன?

நடிகர் தில்ஜித் தோசாஞ்ஜ் நடிப்பில், இயக்குநர் ஹனி ட்ரெஹான் இயக்கிய ‘சத்லஜ் (கல்லுகாரா)’ திரைப்படம் 2022-லேயே தயாராகி வெளியாக வேண்டிய திரைப்படம் . ஆனால், படத்திற்கு சான்றிதழ் பெறுவதற்காக படக்குழு 3 ஆண்டுகளாக மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு (CBFC) உடன் போராடியதாகக் கூறப்படுகிறது.

படத்தின் முக்கியமான காட்சிகளை நீக்குமாறு CBFC வலியுறுத்தியதாகவும், மொத்தம் 127 இடங்களில் கட்கள் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், அவ்வளவு மாற்றங்களைச் செய்ய படக்குழு சம்மதிக்கவில்லை.

இதனைத்தொடர்ந்து படத்தை OTT-யில் வெளியிட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஜூலை 3-ஆம் தேதி Zee5 தளத்தில் படம் வெளியானது. ஆனால், வெளியான இரண்டே நாட்களில் அது OTT-யிலிருந்து நீக்கப்பட்டது.

இத்திரைப்படமானது 1980–1990-களின் பஞ்சாப் பின்னணியில் உருவாக்கப்பட்டது . மனித உரிமை ஆர்வலரும் வங்கி அதிகாரியுமான ஜஸ்வந்த் சிங் கல்ரா என்பவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

அந்தக் காலகட்டத்தில், சில சீக்கிய அமைப்புகள் பஞ்சாபை தனி நாடாக அறிவிக்கக் கோரி போராட்டங்களை முன்னெடுத்தன. அந்த இயக்கத்தின் முக்கியத் தலைவராக ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே அறியப்பட்டார். பின்னர் இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் புளூ ஸ்டார்’ நடவடிக்கையில் அவர் உயிரிழந்தார்.

அதன்பிறகு, பஞ்சாபில் ஆயுத மோதல்கள் தீவிரமடைந்தன. இதைத் தொடர்ந்து போலீசாருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டன. அந்தக் காலகட்டத்தில், சந்தேகத்தின் பேரில் பலர் காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

சுமார் 2,097 பேர் காணாமல் போனதும், கொல்லப்பட்டதும் தொடர்பான ஆதாரங்களை ஜஸ்வந்த் சிங் கல்ரா வெளிக்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அவரும் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார். இந்த உண்மைச் சம்பவங்களே படத்தின் மையக் கதையாக அமைந்துள்ளன.

இந்தப் படம் OTT-யிலிருந்து நீக்கப்பட்டதற்கு, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, முறையான சென்சார் சான்றிதழ் பெறாமல் OTT-யில் படம் வெளியிடப்பட்டதாகவும், அது தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு முரணானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் படம் நீக்கப்பட்டிருந்தாலும், வெளிநாடுகளில் சில இடங்களில் அது இன்னும் திரையிடப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், படத்தின் நாயகன் தில்ஜித் தோசாஞ்ஜ், “படத்தை யாராவது பதிவிறக்கம் செய்து வைத்திருந்தால், நண்பர்களுடனும் பகிருங்கள்” என்று சமூக வலைத்தளங்களில் மறைமுகமாகப் பதிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும், சில குருத்வாராக்களில் புரொஜெக்டர் மூலம் இந்தப் படம் திரையிடப்பட்ட வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

இந்தப் படத்தை மீண்டும் வெளியிட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். 2,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவங்களைப் போலவே, இந்தப் படமும் ‘காணாமல் போய்விட்டது’ என்ற விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *