ஈரோட்டில் நாளை மறுநாள் விஜய் பிரசார பொதுக்கூட்டம்: மைதானம் சீரமைக்கும் பணிகள் தீவிரம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சரளை பகுதியில் உள்ள சுங்கச்சாவடி அருகே, நாளை மறுநாள் (வியாழக்கிழமை) த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்துக்கு அனுமதி கோரியபோது, போலீஸ் துறை சார்பில் 84 கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றுக்கான விளக்கங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை த.வெ.க. நிர்வாகிகள் சமர்ப்பித்தனர். இதனைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி பெறப்படவில்லை என கோவில் செயல் அலுவலர் போலீஸ் மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பினார்.

இதனால், கோவில் நிர்வாகத்திடமிருந்து தடையில்லா சான்று பெற்றுத் தருமாறு போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி, கோவில் நிர்வாகம் ஐந்து நிபந்தனைகளை விதித்தது. பொதுக்கூட்ட இடத்திற்காக ரூ.50 ஆயிரம் வைப்பு நிதி, ரூ.50 ஆயிரம் வாடகை கட்டணம் செலுத்த வேண்டும் என்பதுடன், கூட்டத்திற்கு வரும் மக்களுக்கு குடிநீர், உணவு உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் உறுதி செய்யப்பட வேண்டும் என அந்த நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்டது.

இந்த நிபந்தனைகளை த.வெ.க. ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை தடையில்லா சான்று வழங்கியது. இதன் அடிப்படையில், வரும் 18-ந் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்துக்கு ஈரோடு மாவட்ட போலீஸ் துறை அதிகாரப்பூர்வ அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, நேற்று முதல் கூட்டம் நடைபெறும் மைதானத்தை சீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

மேலும், போலீசாரிடம் அளித்த உறுதிமொழியின் அடிப்படையில், தொண்டர்களை குறிப்பிட்ட நேரத்துக்குள் மைதானத்துக்கு அழைத்து வர தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு கியூஆர் கோடு மூலம் அனுமதி வழங்கப்பட உள்ளது.

பொதுக்கூட்டம் நடத்த காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கூட்டம் நடைபெறும் இடத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார்நிலையில் நிறுத்தி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, பெண்கள் பாதுகாப்பாக அமர்ந்து கட்சித் தலைவர் விஜய் உரையைக் கேட்கும் வகையில், மைதானத்தில் பெண்களுக்கான தனி அமர்வு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி கூட்டம் நடைபெறுமாறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *