தூய்மை பணியை தனியாருக்கு ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு – அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட முயன்ற தூய்மை பணியாளர்கள் கைது
சென்னை அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட முயன்ற தூய்மை பணியாளர்களின் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் அரசின் முடிவை கண்டித்து, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை நோக்கி தூய்மை பணியாளர்கள் பேரணியாக சென்றனர்.
அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்ய முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தூய்மை பணியாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். மேலும், கைது செய்ய மறுத்து சாலையில் வாகனங்களின் அடியில் படுத்து உருண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, போலீசார் வலுக்கட்டாயமாக தூய்மை பணியாளர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர்.
தூய்மை பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பது தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்றும், நிரந்தர பணியிடங்கள் பறிபோகும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

