விஜய் மக்கள் சந்திப்பு: காவல்துறை விதித்த கட்டுப்பாடுகள்
ஈரோடு: த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, காவல்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, நிகழ்ச்சி நடைபெறும் போது தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் பார்வை தடுப்புகள் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பிரசார வாகனத்தில் முக்கிய நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், மக்களுக்கும் பிரசார வாகனத்திற்கும் குறைந்தபட்சம் 50 அடி இடைவெளி பராமரிக்கப்பட வேண்டும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
நிகழ்ச்சி நடைபெறும் திடலில், தெளிவாக பிரிக்கப்பட்ட பாக்ஸ்கள் அமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பாக்ஸிலும் தொண்டர்களுக்கான குடிநீர் வசதி கட்டாயம் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நிகழ்ச்சி நடைபெறும் இடம் குறித்த தெளிவான வரைப்படத்தை முன்கூட்டியே காவல்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்கம்பங்கள் மற்றும் மரங்களில் தொண்டர்கள் ஏறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.
பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

