திருவண்ணாமலை திருக்கார்த்திகை விழா: பரணி தீபம் ஏற்றம் – பக்தர்கள் கூட்டம் கொட்டம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெற்று வரும் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் 10ஆம் நாளை முன்னிட்டு அதிகாலையில் பரணி தீபம் சிறப்பாக ஏற்றப்பட்டது. ஏகன் அனேகனாக மாறும் தத்துவத்தை பிரதிபலிக்கும் இந்த பரணி தீபம், கருவறையில் ஏற்றப்பட்ட தீபத்தினை கொண்டு ஐந்து மடக்குகளில் ஏற்றப்பட்டு மரபுச் சடங்குகள் மிகுந்த பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.
அதிகாலை கோவில் நடை திறந்த பின்னர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்பிகைக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனைகளும் நடந்தன. காலை 4 மணியளவில் கருவறையிலிருந்து கொண்டு வரப்பட்ட தீபம் கருவறை முன்பாக மண்டபத்தில் வைத்து பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் சிவாச்சாரியர்கள் ஊர்வலமாக அதை அம்மன், விநாயகர், முருகன் உள்ளிட்ட சன்னதிகளுக்கு கொண்டு சென்று தீபம் ஏற்றினர்.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடை பிடித்தும், பலர் மழையில் நனைந்தும் “அரோகரா!” என முழங்கி தீப தரிசனத்தில் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நடிகை ரோஜா, மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், ஐஜி அஸ்ரா கர்க், டிஐஜி தர்மராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திருவிழா அங்கமாக கோவில் முழுவதும் வண்ண மலர்களால் அழகுபடுத்தப்பட்டிருந்தது. பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருக்கார்த்திகை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபம் இன்று மாலை 6 மணியளவில் கோவிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயர அண்ணாமலையார் மலைச்சிகரத்தில் ஏற்றப்பட உள்ளது.

