த.வெ.க. அலுவலகத்துக்கு வந்த பா.ம.க. வழக்கறிஞர் பாலு! திடீர் விசிட் ஏன் ?
பா.ம.க. செய்தித்தொடர்பாளரும் வழக்கறிஞருமான கே. பாலு இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் கூட்டணி எந்தவிதத்தில் இருக்கப்போகிறது என்ற கேள்வி ஒருபுறம் எழுந்துள்ள நிலையில், பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்திற்கு பா.ம.க. வழக்கறிஞர் பாலுவின் திடீர் விசிட் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் வரும் டிசம்பர் 17-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்குமாறு த.வெ.கவுக்கு பாமக சார்பில் இன்று (டிசம்பர் 11) அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பா.ம.க. வழக்கறிஞர் கே. பாலு, பனையூரில் அமைந்துள்ள த.வெ.க.வின் தலைமை அலுவலகத்திற்குச் சென்று, கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்தையும் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையனையும் நேரில் சந்தித்து, போராட்டத்திற்கான அழைப்பிதழை வழங்கினார். சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் த.வெ.க. தலைவர் விஜய் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வரும் நிலையில், பா.ம.கவின் இந்த அழைப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது.
சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை முன்னிறுத்தி இரு கட்சிகளும் போராட்டத்தில் இறங்க வாய்ப்புள்ள நிலையில், எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் பா.ம.க மற்றும் த.வெ.க.வுக்கு இடையே கூட்டணி உருவாக உள்ளதா? அதன் முதற்கட்ட முயற்சியாக இந்த சந்திப்பும் அழைப்பும் காரணமாக இருக்கப்பபோகிறதா? என்கின்ற கேள்வி தற்போது தமிழ்நாட்டில் உள்ள அரசியல் நோக்கர்களிடம் எழுந்துள்ளது. விரைவில் பனையூரை தலைமையிடமாக கொண்டுள்ள பாமக தரப்பும், அதே பனையூரில் இருந்து உதயமான தமிழக வெற்றி கழகமும் இணையுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

