சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க புதிய முறை அமல்!
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) பயணிகள் எதிர்கொள்ளும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது. குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் அதிகப்படியான கூட்டத்தை சமாளிக்க, தானியங்கி கட்டண வசூல் (AFC) கேட்கள் மற்றும் கூடுதல் கட்டண வசூல் கவுண்டர்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேபோல், அண்ணா நகர் கிழக்கு, ஷெனாய் நகர் உள்ளிட்ட முக்கிய நிலையங்களிலும் விரைவில் கூடுதல் கேட்கள் அமைக்கப்பட உள்ளன. தியாகராய கல்லூரி மெட்ரோ ரயில் நிலையத்தில் தினசரி சுமார் 6,000 பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட கூடுதல் கேட்கள், பயணிகள் கூட்டத்தை சீராக கையாள உதவும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், பயண நேரம் மீறப்பட்டால் அதற்கான கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதற்கும், பயணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கும், கேட்கள் அருகே சிறப்பு கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.CMRL நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 41 மெட்ரோ ரயில் நிலையங்களில், பொதுவாக நுழைவு மற்றும் வெளியேறுவதற்கு தலா சுமார் 12 தானியங்கி கட்டண வசூல் கேட்கள் உள்ளன. சென்ட்ரல், ஆலந்தூர் போன்ற முக்கிய இணைப்பு நிலையங்களில் 18 முதல் 20 AFC கேட்கள் வரை அமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய ஏற்பாடுகள் காரணமாக, பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பது குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
“முன்னர் பாதுகாப்பு சோதனை முடிந்த பிறகு, கேட்கள் அருகே நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. கடந்த டிசம்பரில் CMRL கூடுதல் கேட்களை நிறுவியதன் பிறகு, காத்திருப்பு நேரம் குறைந்து, ரயிலில் ஏறுவது எளிதாகியுள்ளது” என வழக்கமான பயணியான எஸ். லாவண்யா கூறினார்.

