ராமநாதபுரத்தில் நாராயண காவிரி கால்வாய் புதுப்பிப்பு – 5 லட்சம் மக்களுக்கு உயிர் ஊட்டிய மார்டின் குழுமம்
தமிழ்நாட்டின் மிக வறட்சியான மாவட்டமாக கருதப்படும் ராமநாதபுரம் மாவட்டம் பகுதியில் 54 கிலோமீட்டர் நீளமுள்ள நாராயணன் காவிரி கால்வாயை புதுப்பித்து, 5 லட்சம் மக்களுக்கு பயன் அளிக்கும் மகத்தான பணியை மார்டின் குழுமம் மேற்கொண்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் இலுப்பையூரில் தொடங்கி, கமுதி, கோவிலான்குளம், அம்மன்பட்டி, சட்டநாயக்கன்பட்டி, வாணன்குளம் வழியாக கடலாடி அருகிலுள்ள சாயல்குடி பெரிய கண்மாயில் முடிவடையும் இந்த நாராயணன் காவிரி கால்வாய், ஒருகாலத்தில் உயிர்ப்பாதையாக விளங்கியது. பின்னர் பராமரிப்பின்றி காய்ந்து போய், சீமைக்கருவேல மரங்கள் சூழ்ந்த நிலையில் இருந்தது.
இந்த நிலையை மாற்றும் நோக்கில் மார்டின் குழுமம் 2024 அக்டோபர் மாதம் 50 லட்சம் ரூபாய் செலவில் கால்வாய் புதுப்பிப்பு பணிகளை தொடங்கியது. மெகா அறக்கட்டளை உடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்தப் பணி 2025 நவம்பரில் நிறைவு பெற்றது.
கால்வாயில் வளர்ந்திருந்த சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, கால்வாய் தோண்டி ஆழப்படுத்தப்பட்டது. அகற்றப்பட்ட மண் பயன்படுத்தி கரைகள் பலப்படுத்தப்பட்டன. இந்தப் புதுப்பிப்பு மூலம் 455 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 5 லட்சம் மக்களுக்கு நேரடி மற்றும் மறைமுக நன்மைகள் கிடைக்கின்றன. மேலும் ஆயிரம் ஏரிகளுக்கும் 2,500 சிறிய குளங்களுக்கும் நீர் சென்றடையும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
மெகா அறக்கட்டளையின் நிறுவனர் திரு. நிமல் ராகவன், இந்தியா முழுவதும் 208 நீர்நிலைகளை புதுப்பித்து, 4,500 கிராமங்களைச் சேர்ந்த 80 லட்சம் மக்களுக்கு பயன் அளித்தவர் என குறிப்பிடப்படுகிறது. 21 லட்சம் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் 5 லட்சம் பனைமர விதைகள் விதைத்தல் போன்ற சுற்றுச்சூழல் பணிகளையும் அவர் மேற்கொண்டுள்ளார்.
கால்வாய் மீட்பு மூலம் வறண்ட நிலம் வளமான பகுதியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பு ஒரு போகம் நெல் விளைந்த பகுதியில் இனி மூன்று போகம் வரை சாகுபடி செய்ய இயலும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் மட்டுமல்லாது, மீனவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் பொருளாதார முன்னேற்றம் காண வாய்ப்பு உள்ளது.
கால்வாயின் ஆண்டு முழு பராமரிப்பு பொறுப்பு பஞ்சாயத்து தலைவர்கள், இளைஞர் அமைப்புகள் மற்றும் உள்ளூர் அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நாம் 54 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு கால்வாயை மட்டும் மீட்டெடுக்கவில்லை; வாழ்க்கையை மீட்டெடுத்துள்ளோம்,” என்று மார்டின் குழுமம் தெரிவித்துள்ளது.
இத்திட்டம் ராமநாதபுரம் மாவட்டத்தில் நீர்வள மேலாண்மை மற்றும் கிராமப்புற முன்னேற்றத்திற்கு ஒரு புதிய முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது.

