விண்டேஜ் சூர்யா Is Back! அடுத்த படத்தில் காத்திருக்கும் தரமான சம்பவம்
ஒரு காலத்தில் விஜய், அஜித் ஆகியோருக்கு போட்டியாக தமிழ் சினிமாவின் நம்பர் 1 இடத்திற்கான ரேஸில் இருந்தவர் நடிகர் சூர்யா. வித்தியாசமான கதைகள், மாறுபட்ட கதாபாத்திரங்கள் என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியிருந்தார்.
ஆனால், ‘அஞ்சான்’ திரைப்படத்திற்குப் பிறகு சூர்யாவின் திரையுலக பயணத்தில் தொடர் சறுக்கல்கள் ஏற்பட்டன. அதன்பிறகு வெளியான ‘மாசு என்கிற மாசிலாமணி’, ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘என்ஜிகே’, ‘எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. மிகப்பெரிய பொருட்செலவில் உருவான ‘கங்குவா’ திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் சூர்யாவுக்கு பின்னடைவாக அமைந்தது.
இதற்கிடையே ‘சூரரைப் போற்று’, ‘ஜெய் பீம்’ போன்ற படங்கள் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றதுடன், பல விருதுகளையும் குவித்தன. ஆனால் அவை நேரடியாக ஓடிடியில் வெளியானதால், சூர்யாவின் முழுமையான தியேட்டர் கம்பேக்காக அவை அமையவில்லை.
இந்த சூழலில்தான் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கருப்பு’ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து வெளியான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சூர்யா மீண்டும் தனது பழைய வெற்றி பாதைக்கு திரும்பியிருப்பதாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஒரே ஆண்டில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் மிகப்பெரிய வசூலை பதிவு செய்திருப்பது, சூர்யாவின் கம்பேக் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இந்த ஆண்டின் மூன்றாவது படமாக சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக களமிறங்க உள்ளது.
‘ஆவேஷம்’ படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கும் இப்படத்தில், ஜாலியான அதே நேரத்தில் நெகட்டிவ் ஷேட் கொண்ட காவல்துறை அதிகாரியாக சூர்யா நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான டைட்டில் டீசரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
டீசரில் இடம்பெற்றுள்ள வசனங்கள் மற்றும் சூர்யாவின் போலீஸ் கெட்டப், ரசிகர்களுக்கு ‘மங்காத்தா’ பாணியிலான ஒரு நெகட்டிவ் ஷேட் கதாபாத்திரத்தை நினைவுபடுத்துவதாகவும் பேசப்படுகிறது.
900-க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை கொன்றதாக கூறிக்கொள்ளும் ஒரு காவல்துறை அதிகாரிக்கும், சைக்கோ கில்லருக்கும் இடையேயான மோதலை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாகியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘கருப்பு’, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகிய படங்களை தொடர்ந்து ‘சீன்’ திரைப்படமும் ரூ.250 கோடிக்கு மேல் வசூல் செய்தால், ஒரே ஆண்டில் மூன்று படங்கள் ரூ.250 கோடிக்கும் மேல் வசூல் செய்த நடிகர் என்ற புதிய சாதனையை சூர்யா படைக்க வாய்ப்பு உருவாகும்.
அப்படி நடந்தால், சூர்யாவின் ரசிகர்களுக்கு இந்த ஆண்டு ஒரு மிகப்பெரிய ‘ட்ரிபிள்’ கொண்டாட்டமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.
விஜய் அரசியல் களத்திலும், அஜித் கார் ரேஸிலும் கவனம் செலுத்தி வரும் நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி இடத்திற்கான போட்டியில் உருவாகியிருக்கும் வெற்றிடத்தை சூர்யா பயன்படுத்திக் கொள்வாரா என்பதுதான் ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

