சிபிசிஐடி பிரிவில் காவலர்கள் பற்றாக்குறை — முக்கிய வழக்குகள் கிடப்பில்!

புதுச்சேரி காவல்துறையின் சிபிசிஐடி பிரிவில் தற்போது போலி ஆவணங்கள், கள்ளநோட்டு, ஆயுத கடத்தல், போலி நிதி நிறுவனம் மோசடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகள் விசாரணையில் உள்ளன. மேலும், பல மாதங்களாக நிலுவையில் உள்ள வழக்குகளையும் சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
ஆனால், காவலர்கள் பற்றாக்குறை காரணமாக பல முக்கிய வழக்குகள் தாமதமாகின்றன. தற்போது சிபிசிஐடி பிரிவில் சுமார் 30 காவலர்கள் மட்டுமே பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சில வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்க 10 பேர் கொண்ட குழு வெளியூர் செல்லும் போது, மீதமுள்ள 20 காவலர்களில் 2 பேர் நீதிமன்ற பணிக்குச் செல்லும் நிலை உள்ளது.
இதனால் நிலுவை வழக்குகள், புதிய வழக்குகள் மற்றும் பொதுமக்களின் புகார்களை ஒரே நேரத்தில் கவனிப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், வெளியூரில் குற்றவாளிகளை பிடிக்க தேவையான வாகனங்களும் இல்லாத நிலை காரணமாக, விசாரணை பணிகள் சிரமமாகி வருகின்றன.
சிபிசிஐடி பிரிவுக்கு கூடுதல் போலீசாரை நியமித்து, வழக்குகளை விரைவாக முடித்து குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், காவல்துறை வட்டாரங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.