புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் போலி சான்றிதழ்: கேரளா மாணவர் கைது
புதுச்சேரி சின்ன காலாப்பட்டில் செயல்பட்டு வரும் மத்திய பல்கலைக்கழகமான புதுச்சேரி பல்கலைக்கழகத்தில், போலி கல்விச் சான்றிதழ் சமர்ப்பித்து மேற்படிப்பிற்காக விண்ணப்பித்ததாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த சித்தீக் என்பவர், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பிற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். அவரது விண்ணப்பத்தை பரிசீலித்த பல்கலைக்கழக நிர்வாகம், அவர் சமர்ப்பித்திருந்த இளநிலை கல்வி கல்லூரி சான்றிதழ் போலியானது என்பதை கண்டறிந்தது.
இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரி வம்சீதர ரெட்டி, காலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், காலாப்பட்டு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப் பதிவு செய்து, மாணவர் சித்தீக்கை தேடி விசாரணை நடத்தி வந்தார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவிற்கு சென்ற தனிப்படை காவல்துறையினர், எர்னாகுளம் பகுதியில் பதுங்கி இருந்த சித்தீக்கை கைது செய்து, புதுச்சேரிக்கு அழைத்து வந்தனர்.
பின்னர், கைது செய்யப்பட்ட மாணவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

