புதுச்சேரி போலி மருந்து விவகாரம்: முன்னாள் IFS அதிகாரி, GST கண்காணிப்பாளர் கைது: மொத்தம் 23 பேர் சிக்கினர்
புதுச்சேரி: புதுச்சேரியில் போலி மருந்துகளை தயாரித்து நாடு முழுவதும் விநியோகம் செய்த வழக்கில், முன்னாள் IFS அதிகாரி சத்தியமூர்த்தி மற்றும் GST அலுவலக கண்காணிப்பாளர் பரிதா ஆகியோர், சிறப்பு புலனாய்வு குழு (SIT) போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு, பிரபல மருந்து நிறுவனமான சன் பார்மா அளித்த புகாரின் பேரில் வெளிச்சத்துக்கு வந்தது. புகாரை தொடர்ந்து, புதுச்சேரி CBCID போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மதுரையை சேர்ந்த ராஜா என்பவர், முன்னணி மருந்து நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி போலி உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மாத்திரைகளை தயாரித்து, இந்தியா முழுவதும் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, ராஜாவுக்கு சொந்தமான போலி மருந்து தொழிற்சாலை, மருந்து தயாரிப்பு கிடங்குகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், 600 கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள போலி மருந்துகள், மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தொழிற்சாலைகள் சீல் வைக்கப்பட்டன.
மேலும், நகரின் மையப்பகுதியில் இயங்கி வந்த போலி மருந்து விற்பனையின் தலைமையகங்களாக இருந்த ‘பார்ம் ஹவுஸ்’, ‘ஸ்ரீ சன் பார்மா’ அலுவலகம் மற்றும் கிடங்குகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். இதற்கிடையே, புதுச்சேரி ரெட்டியார்பாளையம் – ஜெயா நகர் பகுதியில் உள்ள ராஜாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், போலி மருந்து தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் வாங்கிய ஆவணங்கள், போலி மருந்து விற்பனை தொடர்பான கணக்குகள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், வைர நகைகள் மற்றும் 25 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கிய விவரங்கள் அடங்கிய டைரி ஒன்றும் போலீசாரால் கைப்பற்றப்பட்டது.
இந்த வழக்கில், போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் ராஜா, ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பிரமுகரும், முதலமைச்சர் ரங்கசாமியின் தீவிர ஆதரவாளருமான என்.ஆர். மணிகண்டன் உட்பட, 21 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக கண்டறியப்பட்ட முன்னாள் IFS அதிகாரி சத்தியமூர்த்தி மற்றும் GST கண்காணிப்பாளர் பரிதா ஆகிய இருவரையும் SIT போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் தற்போது ரகசிய இடத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, கைது செய்யப்பட்ட முன்னாள் IFS அதிகாரி சத்தியமூர்த்தி, 2021 சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் பாஜக சார்பில் போட்டியிட சீட் கோரியிருந்ததுடன், பாஜக புதுச்சேரி மாநில தலைவர் பதவிக்கான பட்டியலிலும் அவரது பெயர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், போலி மருந்து தயாரிப்பு மற்றும் விநியோக வழக்கில் இதுவரை மொத்தம் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், நாட்டளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

