குடியிருப்பு பகுதியில் இயங்கும் ரெஸ்டோ பார் மீது மக்கள் கடும் எதிர்ப்பு – JCM மன்றம் போராட்டம்
பாகூர் தொகுதி குமந்தான்மேடு பகுதியில் குடியிருப்பு சூழலில் நேற்று புதியதாக ரெஸ்டோ பார் துவங்கப்பட்டு உள்ள நிலையில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
JCM மன்ற தலைவர் ரீகன் ஜான் குமார் தலைமையில், ஊர் மக்கள் ஒன்று கூடி அந்த ரெஸ்டோ பார் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த பாரை அகற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
குடியிருப்பு பகுதிக்குள் மது விற்பனை நடைபெறுவது சமூக அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும், இளைஞர்கள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கை முறையில் எதிர்மறை தாக்கத்தை உருவாக்குகிறது என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, JCM மன்ற தலைவர் ரீகன் ஜான் குமார், போராட்டக்காரர்களுடன் பாகூர் காவல் நிலையத்துக்கு சென்று உதவி ஆய்வாளரை சந்தித்து மனு அளித்தார். ரெஸ்டோ பார் மீது உடனடி நடவடிக்கை எடுத்து அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார். துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி ஆய்வாளர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
பேட்டியில் JCM மன்ற தலைவர் ரீகன் ஜான் குமார் கூறியதாவது:
எனது தொகுதி மக்களுடன் இணைந்து தொடர்ந்து போராடி வருகிறோம். இந்த ரெஸ்டோ பார் இங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தையும், சமூக சூழலையும் கெடுத்து வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை. குடியிருப்பு பகுதியில் இத்தகைய பார்கள் இயங்க அனுமதிக்கக் கூடாது. புதுச்சேரி அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த பாரை அகற்ற வேண்டும், என வலியுறுத்தினார்.
போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சில நேரம் பரபரப்பு நிலவியது.

