புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோக்கு அனுமதி இல்லை : பொதுக்கூட்டத்துக்கு மட்டும் அனுமதி
தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் பங்கேற்க உள்ள வரும் 5-ஆம் தேதியிலான ரோடு ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி வழங்க மறுத்துள்ளது.
காலாப்பட்டு முதல் கன்னியகோயில் வரை ரோடு ஷோ நடத்த அனுமதி கோரி கடந்த வாரம் டிஜிபிக்கு மனு அளிக்கப்பட்டிருந்தது. பின்னர் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா பலமுறை டிஜிபி, ஐஜி, எஸ்எஸ்பிகளை சந்தித்து அனுமதி கேட்டும் தீர்வு கிடைக்கவில்லை.
சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் கூறியதால், ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
இன்று சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி, காவல்துறை உயர் அதிகாரிகள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இதில் ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்க முடியாது என தீர்மானிக்கப்பட்டது.
ஆனால், விஜய் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூட்டம் நடைபெறும் தேதி மற்றும் இடத்தை கட்சி நிர்வாகிகள் தேர்வு செய்து கொள்ளலாம் என டிஐஜி சத்தியசுந்தரம் அறிவித்துள்ளார்.

