புதுவையில் போலி மாத்திரை விவகாரம்: மருந்தகங்கள் முற்றுகை – அதிமுக கடும் கண்டனம்
புதுச்சேரி:
புதுச்சேரியில் போலி மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகார் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 26 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 13 குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
புதுவை அரசின் மருந்து கட்டுப்பாட்டு துறை சார்பில் பல்வேறு இடங்களில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி புஸ்ஸி வீதியில் செயல்பட்டு வந்த ‘செம்பருத்தி மருந்தகம்’ மற்றும் ‘ஸ்ரீ குகா மருந்தகம்’ ஆகியவற்றில் போலி மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டதாக கண்டறியப்பட்டது.
இதையடுத்து, இரு மருந்தகங்களுக்கும் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், தடை உத்தரவை மீறி அந்த மருந்தகங்கள் தொடர்ந்து இயங்கி வந்ததாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து, அதிமுக கட்சியினர் மருந்தகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள்,
“தாங்கள் அருந்தும் மாத்திரைகளை கடையில் காட்டி, மக்களின் உயிருடன் விளையாடுகிறார்கள்” என கடும் ஆவேசத்தை வெளிப்படுத்தினர்.
பல ஆண்டுகளாக இதே மருந்தகத்தில் மருந்துகள் வாங்கி வந்ததாக கூறிய சிலர்,
இதய அறுவை சிகிச்சைக்கு பிறகு கடந்த 4 மாதங்களாக மாத்திரைகள் எடுத்தும் வலி குறையவில்லை என குற்றச்சாட்டு எழுப்பினர்.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அதிமுக மாநில செயலாளர் அன்பழகன்,
“இந்த போலி மாத்திரை விவகாரத்திற்கு அரசு மற்றும் சுகாதார துறை பொறுப்பு ஏற்க வேண்டும்” என கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மருந்தகங்களை மூட உத்தரவிட்டனர். மேலும், இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

