அதிமுகவுக்கு கூட இவ்வளவு நிபந்தனைகள் இல்லை… விஜய்க்கு ஆதரவாக முக்கிய கட்சி மனு

பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு இவ்வளவு கடுமையான நிபந்தனைகளை விதிக்காத அரசு, விஜய்க்கு விதிக்கிறது என்று தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்’ என்ற பெயரில் தமது முதல் சுற்றுப்பயணத்தை கடந்த 13ஆம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்குகினார். தொடர்ந்து டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்கள் சந்திப்பு கூட்ட பிரச்சாரங்களை நடத்த திட்டமிடப்பட்டது.
ஆனால், விஜய்யின் பிரசாரத்தின்போது திருச்சியிலும், அரியலூரிலும் ஏராளமான ரசிகர்களும், தொண்டர்களும் வழிநெடுக குவிந்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்தாலும், அரியலூரில் பிரசாரத்தை முடிக்கவே நள்ளிரவு வரை எடுத்துக் கொண்டதாலும், பெரம்பலூரில் மேற்கொள்ள இருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து விஜய் இரண்டாம் கட்ட பிரசாரத்தின்போது, 2 மாவட்டங்களுக்கு மட்டும் தனது பரப்புரையை மேற்கொள்ள திட்டமிட்டு சென்று கொண்டிருக்கிறார். இதற்கிடையே, விஜய்யின் பிரச்சார சுற்றுப் பயணங்களுக்கு காவல் துறையினர் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து தவெக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், பிரச்சாரத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை எந்த பாரபட்சமும் இன்றி பரிசீலித்து, அனுமதி வழங்கக் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, செப்டம்பர் 24ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி தேசிய மக்கள் சக்திக் கட்சி தலைவர் எம்.எல்.ரவி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், “தமிழக ஆளுங்கட்சி, எதிர்கட்சிகளின் குரலை நெரித்து, ஜனநாயகத்தை ஒடுக்க முயற்சிக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு இவ்வளவு கடுமையான நிபந்தனைகளை விதிக்காத அரசு, விஜய்க்கு விதிக்கிறது. தமிழக போலீசார், ஆளுங்கட்சியான திமுகவின் ஒரு அணியாக செயல்படுகின்றனர்” என மனுவில் கூறப்பட்டுள்ளது.