ஓடும் ரயிலில் சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: காவலர் பணியிடை நீக்கம்
சென்னை / கோவை:
சென்னையிலிருந்து கோவைக்கு பயணித்த சட்டக்கல்லூரி மாணவிக்கு, ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் சேக் முகமத், பாதுகாப்பு பணிக்காக சென்னைக்கு சென்று விட்டு, கடந்த சனிக்கிழமை சென்னை-கோவை இன்டர்சிட்டி ரயிலில் கோவைக்கு திரும்பியுள்ளார்.
அதே ரயிலில், சென்னையில் சட்டக்கல்லூரியில் பயிலும் கோவையைச் சேர்ந்த மாணவி பயணம் செய்துள்ளார். ரயில் காட்பாடி அருகே வந்தபோது, மாணவியின் அருகே அமர்ந்திருந்த காவலர் சேக் முகமத் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, தனது செல்போனில் சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார். பின்னர் இதுகுறித்து ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் அளித்தார்.
தகவலின் பேரில், அரக்கோணம் ரயில் நிலையத்தில் காவலர் சேக் முகமத்தை ரயிலில் இருந்து இறக்கி, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்ட காவலர் சேக் முகமத், ஆர்.எஸ்.புரம் காவல் நிலையப் பணியில் இருந்து தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

