காலத்தை வென்ற குரல் மௌனமானது….
பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி (88), வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட மூச்சுத்திணறலால் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவு இந்திய இசையுலகிற்கே ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக அமைந்துள்ளது.
பிரபல பின்னணிப் பாடகியான எஸ். ஜானகி, ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பல்லபட்லா கிராமத்தில், 1938ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி ராமமூர்த்தி – சத்தியவதி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். சிறுவயதிலேயே இசையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அவர், நாதஸ்வர மேதை பைடிசாமியிடம் முறையாக இசைப் பயிற்சி பெற்றார். 1956ஆம் ஆண்டு அகில இந்திய வானொலி நடத்திய பாடல் போட்டியில் பங்கேற்று, அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்திடம் பரிசு பெற்றது அவரது இசைப் பயணத்தின் முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
ஏ.வி.எம். ஸ்டூடியோவில் ஒப்பந்தப் பாடகியாக பணியாற்றிய அவருக்கு, ‘விதியின் விளையாட்டு’ திரைப்படத்தின் மூலம் தமிழில் முதன்முறையாக பின்னணிப் பாடும் வாய்ப்பு கிடைத்தது. டி. சலபதிராவ் இசையில் அவர் பாடிய பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, கண்டசாலாவுடன் இணைந்து தெலுங்குப் பாடலையும் பாடும் வாய்ப்பு கிடைத்தது. அறிமுகமான முதல் ஆண்டிலேயே ஆறு மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி புதிய சாதனையைப் படைத்தார்.
எஸ். ஜானகியின் இசைப் பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது ‘கொஞ்சும் சலங்கை’ திரைப்படம். எஸ். எம். சுப்பையா நாயுடு இசையில், காருகுறிச்சி அருணாசலத்தின் நாதஸ்வர இசையுடன் இணைந்து அவர் பாடிய “சிங்காரவேலனே தேவா” என்ற பாடல், இன்றளவும் இசை ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கும் காலத்தால் அழியாத படைப்பாக திகழ்கிறது.
தமிழில் அவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற திரைப்படம் ‘அன்னக்கிளி’. இளையராஜா இசையில் அவர் பாடிய அனைத்து பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. குறிப்பாக “அன்னக்கிளி உன்னைத் தேடுதே” என்ற பாடல், எஸ். ஜானகிக்கென்று தனி அடையாளத்தையும், ரசிகர்களின் மனதில் நிரந்தர இடத்தையும் பெற்றுத் தந்தது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம், வங்காளம், சமஸ்கிருதம், ஒடியா, குஜராத்தி, ஆங்கிலம், கொங்கணி, துளு, சவுராஷ்டிரா, ஜெர்மன், படுகா, பஞ்சாபி என 17 மொழிகளில் சுமார் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, எண்ணிலடங்கா சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இந்த மாபெரும் சாதனையை இதுவரை வேறு எந்தப் பின்னணிப் பாடகரும் நிகழ்த்தவில்லை என்று கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப் பாடல்களைத் தாமே எழுதி, இசையமைத்து, பாடியுள்ளார். மேலும் ‘மௌனப் போராட்டம்’ என்ற தெலுங்குத் திரைப்படத்திற்கு இசையமைத்தும் உள்ளார். ஐந்து வயது குழந்தையின் குரலிலும், அறுபது வயது மூதாட்டியின் குரலிலும் பாடக்கூடிய அபூர்வமான குரல் வளம் அவருக்கு இருந்தது.
சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை நான்கு முறை வென்றுள்ள எஸ். ஜானகிக்கு, இந்திய அரசு பத்ம பூஷண் விருதை வழங்கி கவுரவித்துள்ளது.
மேலும், தமிழக அரசின் சிறந்த பாடகிக்கான விருதை ஐந்து முறை, கேரள அரசின் விருதை 13 முறை, ஆந்திரப் பிரதேச அரசின் விருதை 7 முறை, ஒடிசா அரசின் விருதை ஒரு முறை பெற்றுள்ளார். இதுதவிர, கலைமாமணி, வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகள் மற்றும் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
எளிமையின் சிகரமாகவும், இசையின் பேரரசியாகவும் விளங்கிய எஸ். ஜானகி இன்று நம்மை விட்டுப் பிரிந்திருந்தாலும், அவரது குரல் என்றும் காலத்தைத் தாண்டி ரசிகர்களின் இதயங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரது மறைவு இந்திய இசையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

